நல்ல மேய்ப்பனின் உவமை
நல்ல மேய்ப்பனின் உவமையில் (உருவகக் கதையில்), இயேசு பகைமை கொண்ட பரிசேயர்களைச் சித்தரித்து, தமது மந்தைக்காகத் தாம் மரித்து மீண்டும் உயிர்பெறப்போவதைக் குறிப்பாக உணர்த்துகிறார்.
எருசலேம்
கி.பி. 29 அல்லது 28
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யோவான் 10:1–21
10:1 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான். 2 வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான். 3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். 4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது. 5 தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார். 6 இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. 7 ஆதலால் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: நானே ஆடுகளுக்கு வாசல் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8 எனக்கு முன்பே வந்தவர்கள் எல்லோரும் திருடர்களும், கொள்ளைக்காரர்களுமாக இருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. 9 நானே வாசல், என்வழியாக ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும், வெளியும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 11 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 12 மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13 வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான். 14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16 இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும். 17 நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார். 18 ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். 19 இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது. 20 அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள். 21 வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
எழுபதுபேரின் ஊழியப்பணி
எழுபதுபேரின் ஊழியப்பணியும், அவர்கள் திரும்பிவரும்போது அவர்களுடைய பணியைக் குறித்துக் கிறிஸ்து அடையும் மகிழ்ச்சியும்.
லூக்கா மட்டுமே குறிப்பிடும் நிகழ்வுகளை இங்கே காண்கிறோம்; இவை அநேகமாக யூதேயாவில் நடந்திருக்கலாம். இவற்றில் சில, கலிலேயாவில் நடைபெற்ற ஊழியத்தின்போது நடந்ததாக மத்தேயுவும் மாற்குவும் குறிப்பிடும் நிகழ்வுகளையும் போதனைகளையும் ஒத்திருக்கின்றன.
அநேகமாக யூதேயாவில்
(பன்னிருவரின் ஊழியப்பணியுடன் ஒப்பிடுக.)
லூக்கா 10:1–24
10:1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4 பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம். 5 ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். 6 சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள். 8 பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு, 9 அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10 எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: 11 எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். 12 அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 13 கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும். 15 வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, 16 சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார். 17 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். 18 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19 இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. 20 ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21 அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. 22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 23 பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24 அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.