நல்ல சமாரியனின் உவமை

நித்திய ஜீவனைப் பற்றிக் கேட்கும் நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவருக்கு இயேசு பதிலளித்து, நல்ல சமாரியனின் உவமையைக் கூறுகிறார்.

அநேகமாக யூதேயாவில்

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லூக்கா 10:25–37

10:25 அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். 26 அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். 27 அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். 28 அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். 29 அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.

30 இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். 31 அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். 32 அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். 33 பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி, 34 அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35 மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 36 இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 37 அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.

இயேசு மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் விருந்தினராக இருக்கிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள பெத்தானியா

லூக்கா 10:38–42

10:38 பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். 39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். 41 இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

இயேசு மீண்டும் ஜெபத்திற்கு ஒரு மாதிரியைத் தருகிறார்

இயேசு மீண்டும் ஜெபத்திற்கு ஒரு மாதிரியைத் தந்து, தமது சீடர்களை ஜெபிக்க ஊக்குவிக்கிறார். விடாப்பிடியாகக் கேட்கும் நண்பனின் உவமை.

அநேகமாக யூதேயாவில்

லூக்கா 11:1–13

11:1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீங்களும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். 2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது:

பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே,

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

உம்முடைய ராஜ்யம் வருவதாக;

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;

3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்;

4 எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்;

நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார்.

5 பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே, 6 என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 7 வீட்டிற்குள் இருக்கிறவன் மறுமொழியாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவை பூட்டிவிட்டோம், என் பிள்ளைகள் என்னோடு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்கு அப்பம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொன்னான். 8 பின்பு, தனக்கு அவன் நண்பனாக இருப்பதினால் எழுந்து அவனுக்கு அப்பம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினாலே எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9 மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். 10 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 11 உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா? 12 அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? 13 பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.