புதிய எருசலேமும் ஒரு புதிய பரதீசும்
மனிதகுலம் முழுவதிலிருந்தும் சேர்க்கப்பட்ட பரலோகச் சபையின் ஆவிக்குரிய மகிழ்ச்சி, புதிய எருசலேம் மற்றும் மற்றொரு பரதீசு என்னும் அடையாளங்களின்கீழ் மேலும் சித்தரிக்கப்படுகிறது. இவை முந்தைய இரு கால ஏற்பாடுகளின்கீழ் பரலோக நிலையைச் சுட்டிக்காட்டிய நன்கறியப்பட்ட முன்மாதிரிகள்.
கி.பி. 96
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வெளிப்படுத்தின விசேஷம் 21:9–22:9
9 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, 10 பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். 11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. 12 அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. 13 வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. 14 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன. 15 என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். 16 அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது. 17 அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது. 18 அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது. 19 நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. 21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது. 22 அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். 23 நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. 24 இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 25 அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. 26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.
22:1 பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான். 2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள். 3 இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். 4 அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 5 அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். 6 பின்பு, தேவதூதன் என்னைப் பார்த்து: “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமானவைகள், சீக்கிரமாக நடக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டும்படி, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்”.
7 “இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான்” என்றார். 8 யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். 9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான்.
தீர்க்கதரிசனங்கள் முத்திரையிடப்படக்கூடாது
வெளிப்படுத்தின விசேஷத்தின் தீர்க்கதரிசனங்கள் மனிதகுலம் முழுவதும் அறிவும் மேம்பாடும் பெறுவதற்காகக் கொடுக்கப்பட்டிருப்பதால், அவை முத்திரையிடப்படக்கூடாது என்று கிறிஸ்து அறிவிக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:10–15
10 அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது. 11 “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12 இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது. 13 நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். 14 ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 15 நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.
உலகத்திற்குக் கிறிஸ்துவின் இறுதி வேண்டுகோள்
கிறிஸ்து இப்போது தீர்க்கதரிசன ஆவியானவர் மூலமாக உலகத்திற்குத் தமது இறுதி வேண்டுகோளை விடுக்கிறார். தமது தெய்வீகத்தன்மையையும் மனிதத்தன்மையையும் மீண்டும் அறிவித்து, மனிதகுலம் முழுவதையும் கிறிஸ்தவ சபைக்குள் வர அழைக்கிறார்; வேதவாக்கியங்களைத் தங்கள் வழிகாட்டியாகக் கொள்ளும்படி கட்டளையிட்டு, தாம் மீண்டும் வருவதை அறிவிக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:16–20
16 இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார். 17 ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும். 18 இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”
கிறிஸ்துவின் வருகைக்காக யோவான் ஏங்குகிறார்
கிறிஸ்துவின் வருகைக்கான தீவிர ஏக்கத்துடனும், சபைகள்மீது ஆசீர்வாதம் உண்டாக வேண்டுமென்ற ஜெபத்துடனும் யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தை முடிக்கிறார்.
21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.