தன் எதிரிகளின் வீழ்ச்சியைக் குறித்துச் சபை மகிழ்கிறது

விக்கிரகாராதனை செய்து தன்னைத் துன்புறுத்திய எதிரிகளின் வீழ்ச்சியைக் குறித்து ஆவிக்குரிய சபை மகிழ்கிறது.

கி.பி. 96

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வெளிப்படுத்தின விசேஷம் 19:1–10

1 இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்:

“அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும்

கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது;

அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.

2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து,

தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள். 3 மறுபடியும் அவர்கள்:

“அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.

4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து:

ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

5 மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே,

அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே,

நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்”

என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.

6 அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும்,

பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி:

அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம்.

ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது,

அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.

8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9 பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.

தீமை வீழ்த்தப்படும்போது தேவகுமாரன் அநேகமாகத் தோன்றுகிறார்

முற்பிதாக்களுக்கும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அப்போஸ்தலர்களுக்கும் தோன்றியதுபோல, தீமை இறுதியாக வீழ்த்தப்படும்போது தேவகுமாரன் அநேகமாகக் கண்களுக்குப் புலப்படும்படி தோன்றுதல்; ஒரு புதிய கால ஏற்பாட்டின் தொடக்கம்; ஆவிக்குரிய சபையின் வெற்றி.

வெளிப்படுத்தின விசேஷம் 19:11–21

11 பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 12 அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது. 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே. 14 பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். 15 அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார். 16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. 17 பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து: 18 நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான். 19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன். 20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். 21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

ஆயிரமாண்டுக் காலத்திற்குச் சாத்தான் கட்டப்படுதல்

தீமை வீழ்த்தப்பட்டபோது ஏற்பட்ட நீண்ட கொந்தளிப்புகள், போர்கள், புரட்சிகளுக்குப் பிறகு, ஆயிரமாண்டு நீடிக்கும் ஓய்வுக்காலம் தொடங்குகிறது; இது சாத்தான் கட்டப்படுவதால் சித்தரிக்கப்படுகிறது. கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது பலருடைய ஆவிகள் அவருடன் எழுந்ததுபோல, இக்காலத்தில் அவர் கண்களுக்குப் புலப்படும்படி தோன்றும்போது, இரத்தசாட்சிகளின் ஆவிகளும் உண்மையுள்ள சபையினரின் ஆவிகளும் கிறிஸ்துவுடன் மீண்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது (2000–3000).

வெளிப்படுத்தின விசேஷம் 20:1–6

1 ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். 2 பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். 3 அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். 4 அன்றியும், நான் சிங்காசனங்களைப் பார்த்தேன்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள். இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் உருவத்தையாவது வணங்காமலும் தங்களுடைய நெற்றியிலும் தங்களுடைய கையிலும் அதின் முத்திரையைத் அணிந்துகொள்ளாமலும் இருந்தவர்களையும் பார்த்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள். 5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். 6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாக இருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியர்களாக இருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள்.

தீமை மீண்டும் எழுகிறது, பின்னர் இறுதி நியாயத்தீர்ப்பு

ஆயிரமாண்டுக் கால ஏற்பாட்டின் முடிவை நெருங்கும்போது தீமையின் ஆவி மீண்டும் எழத் தொடங்குகிறது; ஆனால் பொதுவான உயிர்த்தெழுதலும் மனிதகுலத்தின் இறுதி நியாயத்தீர்ப்பும் அதன் மேலும் பரவுதலைத் தடுத்து நிறுத்துகின்றன.

வெளிப்படுத்தின விசேஷம் 20:7–15

7 அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, 8 பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும். 9 அவர்கள் பூமியெங்கும் நிரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழித்துப்போட்டது. 10 மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

11 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. 12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். 13 கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். 14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 15 ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

மரணமும் தீமையும் துக்கமும் இனி இல்லை

மனிதகுலத்தினரிடையே மரணமும் தீமையும் துக்கமும் இனி இல்லாதிருக்கும்போது வரவிருக்கும் நித்திய மகிழ்ச்சியின் விளக்கம்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:1–4

1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.

இந்த மகிழ்ச்சியில் பங்குபெற அனைவரையும் கிறிஸ்து அழைக்கிறார்

இந்தச் சித்தரிப்பின் உறுதியையும் உண்மையையும் கிறிஸ்து அறிவித்து, இந்த மகிழ்ச்சியில் பங்குபெற எல்லா மக்களையும் அழைக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:5–8

5 சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். 6 அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன். 7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான். 8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.