சுதந்தர உரிமைச் சட்டம்
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யோசேப்பின் மகனுடைய வம்சத்தாரில் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர்கள் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேலின் முன்னோர்களுடைய பிதாக்களில் தலைவர்களாகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி: 2 “சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்களுடைய ஆண்டவனுக்குக் யெகோவா கட்டளையிட்டாரே; அன்றியும், எங்களுடைய சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் மகள்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்களுடைய ஆண்டவனுக்குக் யெகோவாவாலே கட்டளையிடப்பட்டதே. 3 இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் மக்களுடைய வேறொரு கோத்திரத்தின் ஆண்களுக்கு மனைவிகளானால், அந்த மகள்களுடைய சுதந்தரம் எங்கள் முற்பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்களுடைய சுதந்தரத்திற்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இல்லாமல் அற்றுப்போகுமே. 4 இஸ்ரவேல் மக்களுக்கு யூபிலி வருடம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே” என்றார்கள். 5 அப்பொழுது மோசே யெகோவாவுடைய கட்டளையின்படி இஸ்ரவேல் மக்களை நோக்கி: “யோசேப்பு சந்ததியாரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே. 6 யெகோவா செலொப்பியாத்தின் மகள்களைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை திருமணம்செய்யலாம்; ஆனாலும், தங்களுடைய பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மட்டும் அவர்கள் திருமணம் செய்யவேண்டும். 7 இப்படியே இஸ்ரவேல் மக்களின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்திற்குப் போகாமல் இருக்கும்; இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முன்னோர்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும். 8 இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முற்பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் மக்களுடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் மகளும் தன்னுடைய முன்னோரின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும். 9 சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் மக்களுடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான். 10 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி செலொப்பியாத்தின் மகள்கள் செய்தார்கள். 11 செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் என்பவர்கள் தங்களுடைய பிதாவின் சகோதரர்களுடைய சந்ததியாரை திருமணம் செய்தார்கள்; அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் வம்சத்தாரைத் திருமணம் செய்தபடியால், 12 அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடு இருந்தது.
காணிக்கைகள் பற்றிய சட்டங்கள்
காணிக்கைகள் பற்றிய சட்டங்களும் பிற காரியங்களும்.
1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “எனக்கு நறுமண வாசனையாக, தகனபலிகளுக்குரிய காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படி கவனமாக இருக்கவேண்டும் என்று நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிடு. 3 மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நிரந்தர சர்வாங்கதகனபலியாக நாள்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 4 காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, 5 உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும். 6 இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நிரந்தர சர்வாங்கதகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனைக்கான தகனபலி. 7 காற்படி திராட்சைரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே யெகோவாவுக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படவேண்டும். 8 காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாகச் செலுத்தவேண்டும்.
9 “ஓய்வுநாளிலோ உணவுபலிக்காக ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தவேண்டும். 10 எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும். 11 “உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். 12 உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும், 13 உணவுபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும். 14 அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சைரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாக இருக்கவேண்டும்; இது வருடமுழுவதும் மாதம்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்கதகனபலி. 15 எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் யெகோவாவுக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.
16 “முதலாம் மாதம் பதினான்காம் தேதி யெகோவாவுக்கு உரிய பஸ்கா. 17 அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாட்களளவும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும். 18 முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றையதினம் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. 19 அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 20 அவைகளுக்கேற்ற உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், 21 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 22 உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 23 காலையிலே எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும் தவிர இவைகளையும் செலுத்தவேண்டும். 24 இப்படியாக ஏழுநாட்களளவும் நாள்தோறும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டும்; எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் தவிர, இதையும் செலுத்தவேண்டும். 25 ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
26 “அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் யெகோவாவுக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. 27 அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 28 அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், 29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 30 உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 31 நிரந்தர சர்வாங்கதகனபலியையும் அதின் உணவுபலியையும் அதின் பானபலியையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்; இவைகள் பழுதற்றவைகளாக இருக்கவேண்டும்.