காணிக்கைகள் பற்றிய சட்டங்கள் (continued)
காணிக்கைகள் பற்றிய சட்டங்களும் பிற காரியங்களும்.
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 “ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்தஒரு வேலையும் செய்யக்கூடாது; அது உங்களுக்கு எக்காளம் ஊதும் நாளாக இருக்கவேண்டும். 2 அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 3 அவைகளுக்கு அடுத்த உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும், 4 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், 5 உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, 6 மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், தினந்தோறும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் தவிர, இவைகளையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.
7 “இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதிலே நீங்கள் எந்தஒரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, 8 யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 9 அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும், 10 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 11 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்.
12 “ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது; ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கவேண்டும். 13 நீங்கள் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 14 அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும், 15 பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், 16 நிரந்தர தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 17 “இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 18 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும், 19 நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 20 “மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 21 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும், 22 நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 23 “நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 24 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும், 25 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 26 “ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 27 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும், 28 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 29 “ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 30 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும், 31 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலிகளையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 32 “ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 33 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும், 34 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 35 “எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. 36 அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 37 காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும், 38 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 39 “உங்களுடைய பொருத்தனைகளையும், உங்களுடைய உற்சாகபலிகளையும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளையும், உங்களுடைய உணவுபலிகளையும், உங்களுடைய பானபலிகளையும், உங்களுடைய சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்களுடைய பண்டிகைகளிலே யெகோவாவுக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார். 40 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னான்.
பொருத்தனைகள் பற்றிய சட்டம்
1 மோசே இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் தலைவர்களை நோக்கி: “யெகோவா கட்டளையிடுவது என்னவென்றால்: 2 “ஒருவன் யெகோவாவுக்கு எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யவேண்டும். 3 தன்னுடைய தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன்னுடைய சிறுவயதிலே யெகோவாவுக்குப் பொருத்தனைச்செய்து எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டால், 4 அவள் செய்த பொருத்தனையையும், அவள் செய்துகொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும். 5 அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், யெகோவா அதை அவளுக்கு மன்னிப்பார். 6 அவள் பொருத்தனை செய்யும்போதும், தன்னுடைய உதடுகளைத் திறந்து தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்கு கணவன் இருந்தால், 7 அப்பொழுது அவளுடைய கணவன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும். 8 அவளுடைய கணவன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானென்றால், அப்பொழுது யெகோவா அதை அவளுக்கு மன்னிப்பார். 9 ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு பெண்ணாவது தன்னுடைய ஆத்துமாவை எந்த நிபந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும். 10 அவள் தன்னுடைய கணவனுடைய வீட்டில் எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும், 11 அவளுடைய கணவன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாக இருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும். 12 அவளுடைய கணவன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி செய்தால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய கணவன் அவைகளைச் செல்லாதபடி செய்ததினாலே யெகோவா அதை அவளுக்கு மன்னிப்பார். 13 எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய கணவன் உறுதிப்படுத்தவும் முடியும், செல்லாதபடி செய்யவும் முடியும். 14 அவளுடைய கணவன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள் பெயரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் உறுதிப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமல்போனதினால், அவைகளை உறுதிப்படுத்துகிறான். 15 அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி செய்தால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார். 16 கணவனையும், மனைவியையும், தகப்பனையும், தகப்பனுடைய வீட்டில் சிறு வயதில் இருக்கிற அவனுடைய மகளையும் குறித்து, யெகோவா மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.