தேசம் பிரிக்கப்படுகிறது

கி.மு. 1444

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசுவா 14:1–5

1 கானான் தேசத்திலே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களின் தலைவர்களும், யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு, 2 ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சொந்தமாகப் பங்கிட்டார்கள். 3 மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே பங்கு கொடுத்திருந்தான்; லேவியர்களுக்குமட்டும் அவர்கள் நடுவில் பங்கு கொடுக்கவில்லை. 4 மனாசே மற்றும் எப்பிராயீம் என்பவர்கள் யோசேப்பின் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆகவே அவர்கள் லேவியர்களுக்கு தேசத்திலே பங்குகொடுக்காமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களைமட்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். 5 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.

இரண்டரை கோத்திரங்களின் சுதந்தரம்

யோசுவா 13:15–33

15 மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான். 16 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி மெதெபாவரையுள்ள சமபூமி முழுவதும், 17 சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன், 18 யாகசா, கெதெமோத், மெபாகாத், 19 கீரியாத்தாயீம், சீப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார், 20 பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான 21 சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான். 22 இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பிலேயாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள். 23 அப்படியே யோர்தானும் அதற்கடுத்த பகுதியும் ரூபன் கோத்திரத்தின் எல்லையானது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் கோத்திரத்தார்களுக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த பங்கு. 24 காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்: 25 யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரப்பாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும், 26 எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும், 27 எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது. 28 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த பங்கு. 29 மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான். 30 மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது. 31 பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான். 32 மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற மோவாபின் சமவெளிகளில் பங்குகளாகக் கொடுத்தவைகள் இவைகளே. 33 லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.

காலேபின் சுதந்தரம்

யோசுவா 14:6–15

6 அப்பொழுது யூதாவின் கோத்திரத்தார்கள் கில்காலிலே யோசுவாவிடம் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னேயாவிலே யெகோவா என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனிதனாகிய மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். 7 தேசத்தை வேவுபார்க்கக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு 40 வயதாக இருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன். 8 ஆனாலும் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களின் இருதயத்தைப் பயத்தினாலே கரையச்செய்தார்கள்; நானோ என் தேவனாகிய யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினேன். 9 அந்த நாளிலே மோசே: நீ என் தேவனாகிய யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் சொந்தமாக இருக்கட்டும் என்று சொல்லி ஆணையிட்டார். 10 இப்போதும், இதோ, யெகோவா சொன்னபடியே என்னை உயிரோடு காத்தார்; இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் நடந்தபோது, யெகோவா அந்த வார்த்தையை மோசேயிடம் சொல்லி இப்பொழுது 45 வருடங்கள் ஆனது; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். 11 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்தநாள்வரை எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாக இருக்கிறதற்கு அப்பொழுது எனக்கு இருந்த பெலன் இப்பொழுதும் எனக்கு இருக்கிறது. 12 ஆகவே யெகோவா அந்த நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியர்களும், பாதுகாப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்த நாளிலே கேள்விப்பட்டீரே; யெகோவா என்னோடு இருப்பாரானால், யெகோவா சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். 13 அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான். 14 ஆகவே கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், இந்த நாள்வரை இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சொந்தமானது. 15 முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.

யோசுவா 15:13–19

13 எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான். 14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு, 15 அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர். 16 கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான். 17 அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். 18 அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான். 19 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.