பகுதி 2: தேசத்தின் பொதுவான பங்கீடு

வெற்றிகளின் சுருக்கம்

கி.மு. 1444

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசுவா 12:1–13:14

1 யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். 2 அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும், 3 சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரேத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான். 4 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து, 5 எர்மோன் மலையையும் சல்காயிவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆட்சிசெய்தான். 6 அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான். 7 யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும், 8 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்: 9 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று, 10 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று, 11 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று, 12 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று, 13 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று, 14 ஓர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று, 15 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று, 16 மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று, 17 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று, 18 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று, 19 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று, 20 சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று, 21 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று, 22 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று, 23 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலைச்சேர்ந்த கோயிமின் ராஜா ஒன்று, 24 திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

13:1 யோசுவா வயதுமுதிர்ந்தவனானபோது, யெகோவா அவனை நோக்கி: நீ வயதுமுதிர்ந்தவனானாய்; கைப்பற்றிக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விசாலமாக இருக்கிறது. 2 மீதியாக இருக்கிற தேசம் எவைகளென்றால், எகிப்திற்கு எதிரான சீகோர் ஆறு துவங்கிக் கானானியர்களைச் சேர்ந்ததாக என்னப்படும் வடக்கே இருக்கிற எக்ரோனின் எல்லைவரையுள்ள பெலிஸ்தர்களின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும், 3 காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியர்களின் நாடும், 4 தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும், 5 கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகிற திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும், 6 லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும். 7 ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகும்படிப் பங்கிடு என்றார்.

8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான். 9 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும், 10 எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும், 11 கீலேயாத்தையும், கெசூரியர்கள் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும், 12 அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான். 13 இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள். 14 லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.