பகுதி 6: ஜலப்பிரளயம்
கி.மு. 2348
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
5 நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
6 வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான். 7 வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள். 8 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், 9 ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன. 10 ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது. 11 நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன. 12 நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. 13 அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள். 14 அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன. 15 இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன. 16 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். 17 வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது. 18 தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது. 19 தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. 20 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது. 21 அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன. 22 நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின. 23 மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. 24 தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.
8:1 தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது. 2 ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது. 3 தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது. 4 ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது. 5 பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. 6 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, 7 ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது. 8 பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான். 9 பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான். 10 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான். 11 அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான். 12 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.