பகுதி 7: நோவாவுடன் உடன்படிக்கை
கி.மு. 2347
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
13 அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது. 14 இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
15 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: 16 “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள். 17 உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார். 18 அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள். 19 பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன. 20 அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். 21 சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை. 22 பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
9:1 பின்பு தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் ஆசீர்வதித்து: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். 2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்துப் பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற அனைத்தும், சமுத்திரத்தின் மீன்வகைகள் அனைத்தும் உங்கள் கையில் கொடுக்கப்பட்டன. 3 நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன். 4 இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். 5 உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். 6 மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும். 7 நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாகப் பெற்றெடுத்து பெருகுங்கள்” என்றார்.
8 பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி: 9 “நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், 10 உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். 11 இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார். 12 மேலும் தேவன்: “எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், நித்திய தலை முறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: 13 நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். 14 நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். 15 அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். 16 அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன். 17 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்திற்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம்” என்று நோவாவிடம் சொன்னார்.