ஐந்தாம் எக்காளம்: முகம்மதுவும் சரசீனர்களும்
ஒன்றுக்கொன்று இணையாக வளர்ந்துவரும் இரு விசுவாசத்துரோகங்களும், மனிதகுலத்தின் சமாதானம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றின் இரு பெரும் பகைவர்களுமான போப்பாண்டவர் ஆட்சியும் இஸ்லாமும் தோன்றி, வளர்ந்து, இறுதியில் வீழ்த்தப்படுவது முதல் இரண்டு ஆபத்து எக்காளங்களாலும், மூன்றாம் ஆபத்து எக்காளத்தின் கீழ் ஊற்றப்பட்ட ஆறாம் கலசம் வரையிலான நிகழ்வுகளைப் பொறுத்தவரை மூன்றாம் ஆபத்து எக்காளத்தாலும் விவரிக்கப்படுகிறது. ஐந்தாம் எக்காளம், அதாவது முதலாம் ஆபத்து எக்காளம், முழங்குகிறது. ஒரு நட்சத்திரத்தின் வீழ்ச்சி, அதாவது கிழக்குத் திருச்சபையின் சீர்கேடுகள், முகம்மது மற்றும் சரசீனர்களின் விசுவாசத்துரோகத்தைக் கொண்டுவருகிறது. அவர்கள் தவறான நம்பிக்கையிலுள்ள கிறிஸ்தவர்களை 150 ஆண்டுகள் வெற்றிகொள்கிறார்கள் (606 முதல் 762 வரை).
கி.பி. 96
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. 2 அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. 3 அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியில் உள்ள தேள்களின் வல்லமைக்கு இணையான வல்லமைக் கொடுக்கப்பட்டது. 4 பூமியின் புல்லையும், பசுமையான பூண்டையும், மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்களுடைய நெற்றிகளில் தேவனுடைய முத்திரை இல்லாத மனிதர்களைமட்டும் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 5 மேலும் அவர்களைக் கொலைசெய்வதற்கு அவைகளுக்கு அனுமதி கொடுக்காமல், ஐந்து மாதங்கள்வரை அவர்களை வேதனைப்படுத்துவதற்குமட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது; அவைகள் கொடுக்கும் வேதனை, தேள் மனிதனைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போல இருக்கும். 6 அந்த நாட்களில் மனிதர்கள் மரித்துப்போவதற்கான வழியைத் தேடுவார்கள். ஆனாலும் அவர்கள் மரிக்கமாட்டார்கள், சாகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால், சாவோ அவர்களுக்கு விலகி தூரமாக ஓடிப்போகும். 7 அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகள்போல இருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொற்கிரீடம் போன்றவைகள் இருந்தன; அவைகளின் முகங்கள் மனிதர்களுடைய முகங்கள்போல இருந்தன. 8 அவைகளுடைய கூந்தல் பெண்களுடைய கூந்தல்போல இருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போல இருந்தன. 9 இரும்புக் கவசங்களைப்போல மார்புக்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் சத்தம் யுத்தத்திற்கு ஒடுகிற அநேக குதிரைகள் பூட்டிய இரதங்களின் சத்தத்தைப்போல இருந்தன. 10 அவைகள் தேள்களின் வால்களைப்போன்ற வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாக இருந்தன; அவைகள் ஐந்து மாதங்கள்வரைக்கும் மனிதர்களைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாக இருந்தன. 11 அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
ஆறாம் எக்காளம்: நான்கு சுல்தானிய அரசுகள் தாக்குகின்றன
நீண்ட இடைவெளிக்குப் பின் ஆறாம் எக்காளம் முழங்குகிறது. பாக்தாத், தமஸ்கு, அலெப்போ, இக்கோனியா ஆகியவற்றைத் தலைநகரங்களாகக் கொண்ட முஸ்லிம் வல்லமையின் நான்கு சுல்தானிய அரசுகள், ஐபிராத்துக்கு அருகிலுள்ள தங்கள் நிலங்களைவிட்டு வெளியேறிக் கிறிஸ்தவர்களைத் தாக்கத் தொடங்கி, 1281 இல் தங்கள் முதல் வெற்றியைப் பெறுகின்றன. தாங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தபடி கிரேக்கப் பேரரசை அழிக்கின்றன (1453). அவர்கள் கடைசியாகப் புதிய நிலப்பரப்பைக் கைப்பற்றியது 1672 இல் ஆகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 9:12–21
12 முதலாம் ஆபத்து கடந்துபோனது; இவைகளுக்குப் பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ வருகிறது. 13 ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலும் இருந்து ஒரு சத்தம் உண்டாகி, 14 எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனைப் பார்த்து: ஐபிராத்து என்னும் பெரிய நதியிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்வதைக்கேட்டேன். 15 அப்பொழுது மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொல்வதற்காக ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருடத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். 16 குதிரைப்படைகளாகிய இராணுவங்களின் எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது; அவைகளின் எண்ணிக்கையைச் சொல்லக்கேட்டேன். 17 குதிரைகளையும், அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் பார்த்தவிதமாவது; அவர்கள் அக்கினி சிவப்பு நிறமும், நீலநிறமும், கந்தக மஞ்சள் நிறமுமான மார்புக்கவசங்களை உடையவர்களாக இருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போல இருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டு வந்தது. 18 அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்டுவந்த அக்கினி, புகை, கந்தகம் என்னும் இந்த மூன்றினாலும் மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கு கொல்லப்பட்டார்கள். 19 அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலும் வால்களிலும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகள்போலவும், தலைகள் உள்ளவைகளாகவும் இருக்கிறது, அவைகளாலே மனிதர்களைச் சேதப்படுத்துகிறது. 20 அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்றமனிதர்கள், பேய்களையும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் போன்றவைகளால் செய்யப்பட்டவைகளும், பார்க்கவும் கேட்கவும் நடக்கவும் முடியாதவைகளுமாக இருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காமல் இருப்பதற்குத் தங்களுடைய கைகளின் செய்கைகளைவிட்டு மனம்திரும்பவும் இல்லை; 21 தங்களுடைய கொலைபாதகங்களை, தங்களுடைய சூனியங்களை, தங்களுடைய வேசித்தனங்களை, தங்களுடைய களவுகளைவிட்டும் மனம்திரும்பவில்லை.
மேற்குப் பேரரசுக்காக ஒரு தனிச் சுருள்
கிழக்குப் பேரரசின் வரலாற்றை முன்னறிவித்தபின், தீர்க்கதரிசனம் அதே 1260 ஆண்டுக் காலப்பகுதியில் மேற்குப் பேரரசின் வரலாற்றை விவரிக்கத் தொடர்கிறது. இரண்டு ஆபத்து எக்காளங்களால் முன்னறிவிக்கப்பட்ட நிகழ்வுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தீர்க்கதரிசனத்தின் இப்பகுதி மற்றொரு தூதனால் யோவானுக்கு ஒரு தனிச் சுருளாகக் கொடுக்கப்படுகிறது.
1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது. 2 திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து, 3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. 4 அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். 5 கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: 6 இனி காலம் தாமதம் ஆகாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று, 7 வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். 8 நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, 9 நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான். 10 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது. 11 அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.
இரட்டு உடுத்திய இரு சாட்சிகள்
மேற்குத் திருச்சபையின் தீர்க்கதரிசன வரலாற்றைக் கொண்ட சிறிய சுருள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருப்பவர்களுக்கும் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான பிரிவையும், வேதவாக்கியங்கள் மற்றும் அவற்றின் உண்மையான விளக்கவுரையாளர்கள்மீது காட்டப்படும் அவமதிப்பு, பொதுவான புறக்கணிப்பு, வெறுப்பு ஆகியவற்றையும், இரட்டு உடுத்தித் தீர்க்கதரிசனம் சொல்லும் இரு சாட்சிகளின் வருணனையின்கீழ் முதல் பகுதி சித்தரிக்கிறது. இந்தச் சாட்சிகள் ஏறக்குறைய 1260 ஆண்டுகள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் என்றும், இரட்டு உடுத்திய அவர்களுடைய சாட்சியம் முடிவடையும் வேளையில் அவர்கள் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து, தங்கள் மரணத்தைக் குறித்து மகிழ்ந்தவர்கள்மீது வெற்றிபெறுவார்கள் என்றும் அது முன்னறிவிக்கிறது. ஏழாம் எக்காளம் முழங்குவதற்கு முன் இது நிகழும். வெளிப்படுத்தின விசேஷத்தின் இப்பகுதி மிகவும் தெளிவற்றதாக உள்ளது: இது சிறிய சுருளின் உள்ளடக்கத்திற்கான பொதுவான முன்னுரையாக இருக்கலாம் (606–1866).
வெளிப்படுத்தின விசேஷம் 11:1–14
1 பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார். 2 ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள். 3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். 4 பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. 5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும். 6 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. 7 அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். 8 அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும். 9 மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள். 10 அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். 11 மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது. 12 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள். 13 அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 14 இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது.