சவுலின் மரணம் (continued)
கி.மு. 1055
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 பெலிஸ்தர்கள் தங்கள் இராணுவங்ளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றின் அருகே முகாமிட்டார்கள். 2 அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள். 3 அப்பொழுது பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: இந்த எபிரெயர்கள் எதற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருடங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான். 4 அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனிதன் நீர் குறித்த தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போகும்படி, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்கு எதிரியாய் மாறாதபடி, இவன் நம்மோடு யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனிதர்களுடைய தலைகளினால் அல்லவா?
5 சவுல் கொன்றது 1,000,
தாவீது கொன்றது 10,000”
என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
6 அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ முகாமில் என்னோடே போக்கும் வரத்துமாக இருக்கிறது என்னுடைய பார்வைக்கு நல்லது என்றும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரை நான் உன்னில் ஒரு தீங்கும் காணவில்லை; ஆனாலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல. 7 ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான். 8 தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய எதிரிகளோடு யுத்தம்செய்யாதபடி, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதல் இன்றுவரை உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான். 9 ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள். 10 இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடு வந்த உன்னுடைய ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலை வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான். 11 அப்படியே தாவீது அதிகாலையில் தன்னுடைய மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தர்களின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
19 சவுலின்மேல் யுத்தம்செய்யப்போகிற பெலிஸ்தர்களுடனே தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவனுக்கு ஆதரவாகச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தர்களின் பிரபுக்கள் யோசனைசெய்து, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாகத் தன்னுடைய ஆண்டவனாகிய சவுலிற்கு ஆதரவாகப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை. 20 அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகும்போது, மனாசேயில் அதனாக், யோசபாத், யெதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தார்களின் ஆயிரம்பேர்களுக்கு தலைவர்கள் அவனுக்கு ஆதரவாக வந்தார்கள். 21 அந்த படைகளுக்கு விரோதமாக இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்களெல்லோரும் பலசாலிகளும் இராணுவத்தில் தலைவர்களுமாக இருந்தார்கள். 22 அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனிதர்கள் அவனிடம் வந்து சேர்ந்ததால், அவர்கள் தேவசேனையைப்போல பெரிய சேனையானார்கள்.
1 தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருவதற்குள்ளே, அமலேக்கியர்கள் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, 2 அதிலிருந்த பெண்களையும், சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்களுடைய வழியே போய்விட்டார்கள். 3 தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்களுடைய மனைவிகளும் தங்களுடைய மகன்களும் தங்களுடைய மகள்களும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். 4 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள். 5 தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாக இருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள். 6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; எல்லா மக்களும் தங்கள் மகன்கள், மகள்களினிமித்தம் மனவருத்தமானதால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 7 தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான். 8 தாவீது யெகோவாவை நோக்கி: நான் அந்தப் படையைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்ந்து போ; அதை நீ பிடித்து, எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வாய் என்றார். 9 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த 600 பேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றின் அருகில் வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
10 தாவீதோ, 400 பேரோடுத் தொடர்ந்து போனான்; 200 பேர் களைத்துப்போனபடியால் பேசோர் ஆற்றைக் கடக்கமுடியாமல் நின்றுபோனார்கள். 11 ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, சாப்பிட அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, 12 அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், உலர்ந்த இரண்டு திராட்சைப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இரவு பகல் மூன்று நாளாக அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தான். 13 தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எந்த இடத்தை சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் வாலிபன்; மூன்று நாளைக்குமுன்பு நான் வியாதிப்பட்டபோது, என்னுடைய எஜமான் என்னைக் கைவிட்டான். 14 நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவைச்சார்ந்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான். 15 தாவீது அவனை பார்த்து: நீ என்னை அந்த படையினிடத்திற்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என்னுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் படையினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
16 இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, சாப்பிட்டுக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர்கள் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். 17 அவர்களைத் தாவீது அன்று மாலைதொடங்கி மறுநாள் மாலை வரை முறியடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன 400 வாலிபர்கள் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. 18 அமலேக்கியர்கள் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். 19 அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், மகன்களிலும், மகள்களிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். 20 எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
21 களைத்துப்போனதால் தாவீதுக்குப் பின்னே செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த 200 பேரிடம் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த மக்களிடத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த மக்களிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான். 22 அப்பொழுது தாவீதோடு நடந்து வந்த மனிதர்களில் துன்மார்க்கர்களும், பயனற்ற மக்களுமான எல்லோரும்: அவர்கள் எங்களோடே வராதபடியால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள். 23 அதற்குத் தாவீது: என்னுடைய சகோதரர்களே, யெகோவா நமக்கு கொடுத்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாக வந்திருந்த அந்தப் படையை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். 24 இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான். 25 அப்படியே அந்தநாள்முதல் நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்த நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் ஆணையுமாக ஏற்படுத்தினான். 26 தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையடித்தவைகளிலே தன்னுடைய நண்பர்களாகிய யூதாவின் மூப்பர்களுக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, யெகோவாவுடைய எதிரிகளின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச் சொன்னான். 27 யார் யாருக்கு அனுப்பினான் என்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும், 28 ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும், 29 ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், 30 ஓர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும், 31 எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.
31:1 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு இறந்தார்கள். 2 பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகனாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள். 3 சவுலுக்கு விரோதமாக யுத்தம் பலத்தது; வில்வீரர்கள் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களால் மிகவும் காயப்பட்டு, 4 தன்னுடைய ஆயுததாரியைப் பார்த்து: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நிலத்திலே குத்தி வைத்து அதின்மேல் விழுந்தான். 5 சவுல் இறந்துபோனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன்னுடைய பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடு இறந்துபோனான். 6 அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று மகன்களும், அவனுடைய ஆயுதம் ஏந்துபவனும், அவனுடைய எல்லா மனிதர்களும் ஒன்றாக இறந்துபோனார்கள். 7 இஸ்ரவேலர்கள் பயந்தோடினார்கள் என்றும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்புறத்திலும் யோர்தானுக்கு இப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலர்கள் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள். 8 வெட்டுண்டவர்களை கொள்ளையிட, பெலிஸ்தர்கள் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு, 9 அவனுடைய தலையை வெட்டி, அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களின் கோவில்களிலும் மக்களுக்குள்ளும் செய்தியைப் பரப்பும்படி, அவைகளைப் பெலிஸ்தர்கள் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி, 10 அவனுடைய ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவனுடைய உடலைப் பெத்சானின் சுவற்றிலே தூக்கிப்போட்டார்கள். 11 பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் கேட்டபோது, 12 அவர்களிலே பலசாலிகள் எல்லோரும் எழுந்து இரவு முழுவதும் நடந்துபோய், பெத்சானின் சுவற்றிலிருந்த சவுலின் உடலையும் அவன் மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்செய்து, 13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்செய்து, ஏழுநாள் உபவாசம்செய்தார்கள்.
13 அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான். 14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.