ஆகீசு தாவீதுக்குச் சிக்லாக்கைக் கொடுத்தல்
தாவீது காத்தின் அரசனான ஆகீசிடம் தப்பியோடுகிறார்; ஆகீசு அவர் குடியிருக்கச் சிக்லாக்கைக் கொடுக்கிறார். சவுலின் மரணம்.
கி.மு. 1056
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 பின்பு தாவீது: நான் எந்த நாளிலாவது ஒரு நாள் சவுலின் கையினால் அழிந்து போவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை இல்லாமல்போகும்படியும், நான் அவனுடைய கைக்கு நீங்கியிருக்கும்படியும், நான் பெலிஸ்தர்களின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதை விட நலமான காரியம் வேறில்லை என்று தன்னுடைய இருதயத்தில் யோசித்தான்.
தாவீதின் பாடல்.
1 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,
என்னிடத்திற்கு விரைந்துவாரும்;
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,
என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.
2 என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,
என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
3 யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்;
என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4 அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி
என்னுடைய இருதயத்தைத்
துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்;
அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி,
என்னைக் கடிந்துகொள்ளட்டும்;
அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;
என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை;
அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.
6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து
தள்ளப்பட்டுபோகிறபோது,
என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல,
எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
8 ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே,
என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது;
உம்மை நம்பியிருக்கிறேன்;
என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும்,
அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.
10 துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக;
நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
2 ஆகையால் தாவீது தன்னோடு இருந்த 600 பேரோடு எழுந்து, மாயோகின் மகனான ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான். 3 அங்கே தாவீதும், அவனுடைய மனிதர்களும், அவரவர் வீட்டாரும், தாவீதோடு அவனுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலும், காத் பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள். 4 தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை. 5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் தங்கும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம்முடைய அடியான் உம்மோடு இராஜரீக பட்டணத்திலே ஏன் தங்கவேண்டும் என்றான். 6 அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்த நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது. 7 தாவீது பெலிஸ்தர்களின் நாட்டிலே ஒரு வருடமும் நான்கு மாதங்களும் குடியிருந்தான்.
1 தாவீது கீசின் மகனாகிய சவுலால் இன்னும் மறைவாக இருக்கும்போது, சிக்லாகில் இருக்கிற அவனிடம் வந்து, 2 யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரர்களும், கவண்கல் எறிவதற்கும் வில்லினால் அம்பு எய்வதற்கும் வலது இடது கை பழக்கமான பலசாலிகளான மற்ற மனிதர்களுமாவன: சவுலின் சகோதரர்களாகிய பென்யமீன் கோத்திரத்தில், 3 கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் மகன்களாகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும், 4 முப்பதுபேர்களில் பலசாலியும் முப்பதுபேர்களுக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரைச்சேர்ந்த யோசபாத், 5 எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா, 6 எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோராகியர்களும், 7 யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரைச்சேர்ந்த எரோகாமின் மகன்களுமே.
8 அங்கேயிருந்து தாவீதும் அவனுடைய மனிதர்களும் கெசூரியர்கள் மேலும் கெஸ்ரியர்கள்மேலும் அமலேக்கியர்கள்மேலும் படையெடுத்துப் போனார்கள்; சூருக்குப் போகிற எல்லை தொடங்கி எகிப்து தேசம் வரை இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் தொடங்கி குடியிருந்தவர்கள் இவர்களே. 9 தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, ஆண்களையும் பெண்களையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பி வருவான். 10 இன்று எந்த திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தெற்கு திசையிலும், யெராமியேலர்களுடைய தெற்கு திசையிலும் கேனியருடைய தெற்கு திசையிலும் என்பான். 11 இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கும்படி ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடி, ஒரு ஆணையாவது பெண்ணையாவது உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தர்களின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டுவந்தான். 12 ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய மக்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றென்றும் அவன் என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
சவுலின் மரணம் கி.மு. 1055
1 அந்த நாட்களிலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய, தங்களுடைய இராணுவங்களைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன்னுடைய மனிதர்களும் என்னோடு யுத்தத்திற்கு வரவேண்டும் என்று அறிந்துகொள் என்றான். 2 தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்கள் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
3 சாமுவேல் இதற்கு முன்பே இறந்துபோனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் செய்தார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான். 4 பெலிஸ்தர்கள் கூடிவந்து, சூனேமிலே முகாமிட்டார்கள்; சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே முகாமிட்டார்கள். 5 சவுல் பெலிஸ்தர்களின் முகாமை கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது. 6 சவுல் யெகோவாவிடத்தில் விசாரிக்கும்போது, யெகோவா அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை. 7 அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள். 8 அப்பொழுது சவுல் வேடம் மாறி, வேறு உடை அணிந்துகொண்டு, அவனும் அவனோடு இரண்டுபேரும் இரவிலே அந்த பெண்ணிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் பார்த்து: நீ எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். 9 அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். 10 அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான். 11 அப்பொழுது அந்த பெண்: உமக்கு நான் யாரை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றான். 12 அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள். 13 ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். 14 அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான். 15 சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரச் செய்து, என்னைத் தொந்தரவு செய்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாய் யுத்தம்செய்கிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலும், சொப்பனங்களினாலும் எனக்கு பதில் சொல்கிறதில்லை; எனவே, நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைத்தேன் என்றான். 16 அதற்குச் சாமுவேல்: யெகோவா உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாக இருக்கும்போது, நீ என்னிடத்தில் ஏன் கேட்கிறாய்? 17 யெகோவா என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்ஜியத்தை உன்னுடைய கையிலிருந்து பறித்து, அதை உன்னுடைய தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். 18 நீ யெகோவாவுடைய சொல் கேட்காமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியால், யெகோவா இன்றையதினம் உனக்கு இப்படிச் செய்தார். 19 யெகோவா உன்னையும், உன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலர்களையும் பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன்னுடைய மகன்களும் என்னோடு இருப்பீர்கள்; இஸ்ரவேலின் முகாமையும் யெகோவா பெலிஸ்தர்களின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 20 அதை கேட்டவுடனே சவுல் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் அன்று பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தபடியால், அவன் பெலவீனமாக இருந்தான். 21 அப்பொழுது அந்த பெண் சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என்னுடைய உயிரை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். 22 இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைச் சாப்பிடுவீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். 23 அவனோ அதை மறுத்து, நான் சாப்பிடமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரர்களும் அந்த பெண் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான். 24 அந்த பெண்ணிடம் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதை விரைவாக அடித்து, மாவு எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு, 25 சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் சாப்பிட்டு எழுந்து, அந்த இரவிலேயே புறப்பட்டுப் போனார்கள்.