சனகெரிப்பின் முதல் படையெடுப்பு

கி.மு. 713

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 நாளாகமம் 32:1–8

1 இந்தக்காரியங்கள் நிறைவேறிவரும்போது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, பாதுகாப்பான பட்டணங்களுக்கு எதிராக முகாமிட்டு, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான். 2 சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் போர்செய்யத் திட்டமிட்டிருப்பதை எசேக்கியா கண்டபோது, 3 நகரத்திற்கு வெளியே இருக்கிற ஊற்றுகளை அடைத்துவிட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைசெய்தான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள். 4 அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி, அநேகம் மக்கள் கூடி, அனைத்து ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் அடைத்துப்போட்டார்கள். 5 அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதில்களையும் கோபுரங்கள் வரை உயர்த்தி, தாவீதின் நகரத்தினுடைய கோட்டையைப் பலப்படுத்த, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்செய்து, 6 மக்களின்மேல் படைத்தலைவரை ஏற்படுத்தி, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னருகில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: 7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம். 8 அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

எசேக்கியா அடிபணிகிறார், அஸ்தோத் கைப்பற்றப்படுகிறது

2 இராஜாக்கள் 18:13–16

13 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான். 14 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவிற்கு ஆள் அனுப்பி: நான் குற்றம்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான். 15 ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். 16 அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா யெகோவாவுடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவிற்குக் கொடுத்தான்.

ஏசாயா 20

1 சேனாதிபதி தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே, 2 யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான். 3 அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல, 4 அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான். 5 அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி: 6 இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார்.

எருசலேமுக்கு ஒரு தீர்க்கதரிசன வேண்டுகோள்

சனகெரிப்பின் படை நாட்டில் இருக்கும்போது எருசலேமுக்கு விடுக்கப்படும் ஒரு தீர்க்கதரிசன வேண்டுகோள்.

ஏசாயா 29

1 தாவீது தங்கியிருந்த நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ, வருடாவருடம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும், 2 அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும். 3 உன்னைச் சூழப் படைகளை நிறுத்தி, உன்னைத் கோபுரங்களால் முற்றுகையிட்டு, உனக்கு விரோதமாகக் கோட்டை மதில்களை எடுப்பிப்பேன். 4 அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாக மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் குறிசொல்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும். 5 உன்மேல் வருகிற அந்நியரின் கூட்டம் பொடித்தூள் அளவாகவும், பலவந்தரின் கூட்டம் பறக்கும் பதர்களைப்போலவும் இருக்கும்; அது திடீரென்று உடனே சம்பவிக்கும். 6 இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புயலினாலும், சுட்டெரிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் யெகோவாவாலே விசாரிக்கப்படுவாய். 7 அரியேலின்மேல் போர்செய்கிற திரளான சகல தேசங்களும், அதின்மேலும் அதின் அரண்மேலும் போர்செய்து, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இரவுநேரத் தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். 8 அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும். 9 தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சைரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல. 10 யெகோவா உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரச்செய்து, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரர்களாகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார். 11 ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புத்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் முடியாது, இது முத்திரை போடப்பட்டிருக்கிறது என்பான். 12 அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புத்தகத்தைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். 13 இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. 14 ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த மக்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார். 15 தங்கள் ஆலோசனையைக் யெகோவாவுக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் செயல்களை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைப் பார்க்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, 16 ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ? 17 இன்னும் கொஞ்ச காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக என்னப்படும். 18 அக்காலத்திலே செவிடர்கள் புத்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடர்களின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்திற்கும் நீங்கலாகிப் பார்வையடையும். 19 சிறுமையானவர்கள் யெகோவாவுக்குள் மிகவும் மகிழ்ந்து, மனிதர்களில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள். 20 கொடியவன் அற்றுப்போவான், பரியாசக்காரன் இல்லாமற்போவான். 21 ஒரு வார்த்தைக்காக மனிதனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நியாயமில்லாமல் துரத்தி, இப்படி அக்கிரமம்செய்ய வகைதேடுகிற அனைவரும் அழிக்கப்படுவார்கள். 22 ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட யெகோவா யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை. 23 அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள். 24 வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.