யூதேயாவின்மீதான படையெடுப்பும் பாபிலோனின் அழிவும் முன்னறிவிக்கப்படுகின்றன
கி.மு. 713
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 தரிசனப் பள்ளத்தாக்கைக் குறித்த செய்தி. உன்னில் உள்ளவர்கள் எல்லோரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன? 2 ஆட்கள் நடமாட்டம் நிறைந்து ஆரவாரம்செய்து, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் பட்டயத்தால் கொலை செய்யப்படவில்லை, போரில் இறந்ததும் இல்லை. 3 உன் அதிபதிகள் எல்லோரும் ஏகமாக ஓடி அலைந்தும், வில்வீரர்களால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட அனைவரும் தூரத்திற்கு ஓடியும் ஏகமாகக் கட்டப்படுகிறார்கள். 4 ஆகையால், என்னை நோக்கிப் பார்க்காதீர்கள்; மகளாகிய என் மக்கள் பாழாய்ப்போனதின் காரணமாக மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதீர்கள் என்கிறேன். 5 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும், மிதிக்கப்படுதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது; இது அலங்கத்தைத் தகர்த்து, மலைக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது. 6 ஏலாமியன் அம்புகளை வைக்கும் பையை எடுத்து, இரதங்களுடனும் காலாட்களுடனும் குதிரைவீரர்களுடனும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும். 7 மிகச் சிறப்பான உன் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்; குதிரைவீரர்கள் வாசல்கள் வரை வந்து அணிவகுத்து நிற்பார்கள். 8 அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய். 9 நீங்கள் தாவீது நகரத்தின் விரிசல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு, கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டிவைத்து, 10 எருசலேமின் வீடுகளை எண்ணி, மதிலை பலப்படுத்தும்படி வீடுகளை இடித்து, 11 இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு குளத்தை உண்டாக்குவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரச்செய்தவரைக் கவனிக்காமலும் போகிறீர்கள். 12 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், சணல்உடையை அணியவும் கட்டளையிட்டார். 13 நீங்களோ, சந்தோஷித்து மகிழ்ந்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சைரசத்தைக் குடித்து: சாப்பிடுவோம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள். 14 மெய்யாகவே நீங்கள் சாகும்வரை இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறாரென்பது என் காது கேட்கும்படி சேனைகளின் யெகோவாவால் தெரிவிக்கப்பட்டது.
1 கடல் வனாந்திரத்தைக்குறித்த செய்தி. சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்திரத்திலிருந்து அது வருகிறது. 2 பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன். 3 ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைச்சல்கொண்டு, கண்டதினால் கலங்கினேன். 4 என் இருதயம் திகைத்தது; பயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது; எனக்கு இன்பம் தந்த இரவு பயங்கரமானது. 5 பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், காவலாளியை அமர்த்துங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள். 6 ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிப்பதற்காக காவலாளியை வை என்றார். 7 அவன் ஒரு இரதத்தையும், ஜோடி ஜோடியாகக் குதிரைவீரனையும், ஜோடி ஜோடியாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாகக் கவனித்துக்கொண்டே இருந்து: 8 ஆண்டவரே, நான் பகல்முழுவதும் என் காவலிலே நின்று, இரவுமுழுவதும் நான் என் காவலிடத்திலே தங்கியிருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். 9 இதோ, ஒரு ஜோடி குதிரை பூட்டப்பட்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனிதன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் தெய்வங்களுடைய சிலைகளையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று மறுமொழி சொல்கிறான். 10 என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.
11 தூமாவுக்கு செய்தி. சேயீரிலிருந்து என்னை நோக்கி: காவலாளியே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க; 12 அதற்கு காவலாளி: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதிருந்தால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்கிறான்.
13 அரேபியாவுக்குச் செய்தி. திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரேபியாவின் காடுகளில் இரவுதங்குவீர்கள். 14 தேமா தேசத்தின் குடிமக்களே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள். 15 அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின பட்டயத்திற்கும், நாணேற்றின வில்லுக்கும், போரின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள். 16 ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான ஒரே வருடத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் விட்டுப்போகும். 17 கேதார் மக்களாகிய பராக்கிரம வில்வீரரின் எண்ணிக்கையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதை உரைத்தார்.