தாவீதின் ஆட்சிக்காலச் சங்கீதங்கள், காலங்கள் உறுதியாகத் தெரியவில்லை (continued)

தாவீது அரசரான பிறகு எழுதிய சங்கீதங்கள்; இவை எழுதப்பட்ட காலங்களும் சூழ்நிலைகளும் உறுதியாகத் தெரியவில்லை.

கி.மு. 1015

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 24

தாவீதின் பாடல்.

1 பூமியும் அதின் நிறைவும்,

உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.

2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,

அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 3 யார் யெகோவாவுடைய மலையில் ஏறுவான்?

யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?

4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,

தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,

பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.

5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,

தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

6 இதுவே அவரைத் தேடி விசாரித்து,

அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)

7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

8 யார் இந்த மகிமையின் இராஜா?

அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;

அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.

9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

10 யார் இந்த மகிமையின் இராஜா?

அவர் சேனைகளின் யெகோவா;

அவரே மகிமையின் இராஜா (சேலா).

சங்கீதங்கள் 28–29

தாவீதின் பாடல்.

1 என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்;

நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது,

என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

3 அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும்,

தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.

4 அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்;

அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும்,

அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.

5 அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால்,

அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

6 யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்;

அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.

7 யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்;

என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்;

ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது;

என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.

8 யெகோவா அவர்களுடைய பெலன்;

அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.

9 தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்;

அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

தாவீதின் பாடல்.

29:1 தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;

கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

2 யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;

பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.

3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;

மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;

யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;

யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.

5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;

யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,

சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.

7 யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.

8 யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;

யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.

9 யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,

காடுகளை வெளியாக்கும்;

அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்

யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

10 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;

யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.

11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;

யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,

அவர்களை ஆசீர்வதிப்பார்.

சங்கீதங்கள் 38

நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல்.

1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;

உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.

2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;

உமது கை என்னைத் தாங்குகிறது.

3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;

என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.

4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,

அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.

5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;

என் உடலில் ஆரோக்கியம் இல்லை.

8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;

என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;

என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.

10 என் உள்ளம் குழம்பி அலைகிறது;

என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.

11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;

என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;

எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி,

நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,

ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.

14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.

15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;

என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.

16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;

என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.

17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;

என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,

என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.

19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;

காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,

நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.

21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;

என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.

22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,

எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.