பெக்கா யூதாவைப் பாழாக்குகிறார்

கி.மு. 741

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 நாளாகமம் 28:4–19

4 மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான அனைத்து மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான். 5 ஆகையால் அவனுடைய தேவனாகிய யெகோவா அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனைத் தோற்கடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்து தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை மிகுதியாக தோற்கடித்தான். 6 எப்படியெனில், யூதா மனிதர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், ரெமலியாவின் மகனாகிய பெக்கா அவர்களில் ஒரே நாளில் ஒருலட்சத்து இருபதாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லோரும் மிகுந்த ஆற்றல் உள்ளவர்கள். 7 அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் மகனாகிய மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாம் நிலையிலிருந்த எல்க்கானாவையும் கொன்றுபோட்டான். 8 இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரர்களில் இரண்டு லட்சம்பேராகிய பெண்களையும் மகன்களையும் மகள்களையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.

9 அங்கே ஓதேத் என்னும் பெயருடைய யெகோவாவுடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற படைக்கு எதிராகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவா யூதாவின்மேல் கோபம்கொண்டதால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானம்வரை எட்டுகிற கடுங்கோபத்தோடு அவர்களை அழித்தீர்கள். 10 இப்போதும் யூதாவின் மக்களையும் எருசலேமியர்களையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ? 11 ஆதலால் நீங்கள் எனக்கு செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரர்களிடத்தில் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான். 12 அப்பொழுது எப்பிராயீம் வம்சத்தினரின் தலைவர்களில் சிலராகிய யோகனானின் மகன் அசரியாவும், மெஷிலெமோத்தின் மகன் பெரகியாவும், சல்லூமின் மகன் எகிஸ்கியாவும், அத்லாயின் மகன் அமாசாவும் போரிலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி, 13 அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் கடுங்கோபமும் இருக்கும்போது, நீங்கள், யெகோவாவுக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரச்செய்யத்தக்கதாக, நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள். 14 அப்பொழுது ஆயுதம் அணிந்தவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் அனைத்து சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள். 15 அப்பொழுது பெயர் குறிக்கப்பட்ட மனிதர்கள் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் ஆடையில்லாத அனைவருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்து, ஆடைகளையும் காலணிகளையும் அணிவித்து, அவர்களுக்கு சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுடைய காயங்களுக்கு எண்ணெய் பூசி, அவர்களில் பெலவீனமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரர்களிடத்திற்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

16 அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைசெய்ய அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பினான். 17 ஏதோமியரும் கூடவந்து, யூதாவைத் தாக்கி, சிலரை சிறைபிடித்துப்போயிருந்தார்கள். 18 பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களைத் தாக்கி, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சோக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள். 19 யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் யெகோவா யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவை சீர்குலைத்து, யெகோவாவுக்கு விரோதமாக மிகவும் துரோகம் செய்தான்.

ஒபதியா 1

1 ஒபதியாவின் தரிசனம்; யெகோவாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக போரிட எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க, பிரதிநிதி மக்களிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் யெகோவா சொல்லக்கேட்டோம். 2 இதோ, நான் உன்னை தேசங்களில் சிறுகும்படிச் செய்தேன்; நீ மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கிறாய். 3 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த பகுதியிலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றுகிறது. 4 நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 5 நீ எவ்வளவாகச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடர்களோ, இரவில் கொள்ளையடிக்கிறவர்களோ உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானஅளவு திருடுவார்கள் அல்லவோ? திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ? 6 ஏசாவினுடையவைகள் எவ்வளவாகத் கொள்ளையடிக்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாக ஆராய்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. 7 உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை. 8 அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலையிலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 9 தேமானே, ஏசாவின் மலையிலுள்ள மனிதர்கள் அனைவரும் கொலையினால் அழிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.

10 நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் காரணமாக வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவாய். 11 நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர்கள் அவனுடைய படையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார்கள் அவனுடைய வாசல்களுக்குள் நுழைந்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய். 12 உன் சகோதரன் அந்நியர்கள்வசமான அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பார்க்காமலும், யூதா மக்களுடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாகப் பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது. 13 என் மக்களின் ஆபத்து நாளிலே நீ அவர்களுடைய வாசல்களுக்குள் நுழையாமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ விருப்பத்துடன் பார்க்காமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்களுடைய சொத்தில் கைவைக்காமலும், 14 அவர்களில் தப்பினவர்களை அழிக்க வழிச்சந்திப்புகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடுக்காமலும் இருக்கவேண்டியதாயிருந்தது. 15 எல்லா தேசங்களுக்கும் விரோதமான நாளாகிய யெகோவாவுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். 16 நீங்கள் என் பரிசுத்தமலையின்மேல் மதுபானம் குடித்ததுபோலவே எல்லா மக்களும் எப்பொழுதும் மதுபானம் குடிப்பார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இல்லாதவர்களைப்போல் இருப்பார்கள்.

17 ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பவர்கள் உண்டு, அவர்கள் பரிசுத்தமாக இருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார்கள் தங்களுடைய சொத்துக்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 18 யாக்கோபு வம்சத்தார்கள் நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள் நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்; ஏசா வம்சத்தார்களோ வைக்கோல் துரும்பாக இருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச் சொன்னார். 19 தென்தேசத்தார்கள் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார்கள் பெலிஸ்தரின் தேசத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 20 சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களாகிய இந்தப் படையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப் பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 21 ஏசாவின் மலையை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்துசேர்வார்கள்; அப்பொழுது இராஜ்யம் யெகோவாவுடையதாக இருக்கும்.

ஏசாயா 1:2–31

2 வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள். 3 மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார். 4 ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். 5 இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது. 6 உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. 7 உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது. 8 மகளாகிய சீயோன், திராட்சைத்தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு நகரத்தைப்போலவும் மீந்திருக்கிறாள். 9 சேனைகளின் யெகோவா நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். 10 சோதோமின் அதிபதிகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள். 11 உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. 12 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? 13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன். 14 உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன். 15 நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. 16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; 17 நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 18 வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 19 நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். 20 மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று. 21 உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள். 22 உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது. 23 உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. 24 ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன். 25 நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். 26 உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். 27 சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். 28 துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். 29 நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்; 30 இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். 31 பராக்கிரமசாலி சணல்குவியலும், அவன் செயல் அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அணைப்பாரில்லாமல் அனைத்தும் வெந்துபோகும் என்று சொல்கிறார்.