ஆகாஸ் திகிலாத்பிலேசருடன் கூட்டணி அமைக்கிறார்

ஆகாஸ் அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசருடன் கூட்டணி அமைக்கிறார்.

கி.மு. 740

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 16:6–9

6 அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு. யூதர்களை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர்கள் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும் அவ்விடத்திலே குடியிருக்கிறார்கள். 7 ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய மகனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாக எழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னைத் தப்புவியும் என்று சொல்லச் சொல்லி; 8 யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவிற்குக் காணிக்கையாக அனுப்பினான். 9 அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிமக்களைக் கீர் என்னும் பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

ஏசாயா 28

1 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் பூவே! 2 இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான். 3 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும். 4 செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய பூ, பருவகாலத்திற்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும். 5 அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும், 6 நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், போரை அதின் வாசல்வரை திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார். 7 ஆனாலும் இவர்களும் திராட்சைரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிவிலகிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சைரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிவிலகி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். 8 உணவு உண்ணும் இடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. 9 அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கச்செய்யப்பட்டவர்களுக்குமே. 10 கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். 11 பரியாச உதடுகளினாலும் அந்நிய மொழியினாலும் இந்த மக்களுடன் பேசுவார். 12 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறச்செய்யும் இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களிடம் அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், யெகோவாவுடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். 14 ஆகையால் எருசலேமிலுள்ள இந்தமக்களை ஆளுகிற நிந்தனைக்காரரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 15 நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. 16 ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான். 17 நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை பெருவெள்ளம் அடித்துக்கொண்டுபோகும். 18 நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். 19 அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும். 20 கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது. 21 யெகோவா தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார். 22 இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் செய்யாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் தீர்மானிக்கப்பட்ட அழிவின் செய்தியைச் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன். 23 செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். 24 உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ? 25 அவன் அதை மேலாக பரப்பினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ? 26 அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துவிக்கிறார். 27 உளுந்து இரும்புக்கோலாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டியின் உருளை சுற்றவிடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும். 28 அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை. 29 இதுவும் சேனைகளின் யெகோவாவாலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

2 நாளாகமம் 28:20–23

20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை. 21 ஆகாஸ் யெகோவாவுடைய ஆலயத்தில் ஒருபங்கும், ராஜ அரண்மனையில் ஒருபங்கும், பிரபுக்களின் கையில் ஒருபங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தபோதும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை. 22 தான் நெருக்கப்படுகிற காலத்திலும் யெகோவாவுக்கு விரோதமாக அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்செய்துகொண்டே இருந்தான். 23 எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறதால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்கு பலியிடுவேன் என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் அழிவதற்கு காரணமானது.

2 இராஜாக்கள் 16:10–18

10 அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டுபோய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் தோற்றத்தையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான். 11 ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அதைப்போலவே ஒரு பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான். 12 ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்திற்கு அருகில் வந்து, அதின்மேல் பலியிட்டு, 13 தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை ஊற்றி, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான். 14 யெகோவாவின் சந்நிதியிலிருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் யெகோவாவின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முன்புறத்திலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாக வைத்தான். 15 ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலை சர்வாங்க தகனபலியையும், மாலை போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல மக்களுடைய சர்வாங்க தகனபலி, போஜனபலி, பானபலி ஆகியவற்றைச் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் உதவி கேட்கிறதற்கு உதவும் என்றான். 16 ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான். 17 பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் பலகைகளை அகற்றிவிட்டு, அவைகளின் மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல காளைகளின்மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து, 18 ஆலயத்தின் அருகே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியாவின் ராஜாவினிமித்தம் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.

2 நாளாகமம் 28:24–25

24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் தட்டுமுட்டுகளைச் சேர்த்து, அவைகளைத் துண்டுதுண்டாக்கி, யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டாக்கி, 25 அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதற்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டாக்கி; தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.

ஓசியா 5

1 ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள். 2 நெறிதவறினவர்கள் அதிகமாக வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் நான் தண்டிப்பேன். 3 எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே. 4 அவர்கள் தங்கள் தேவனிடத்திற்குத் திரும்புவதற்குத் தங்கள் செயல்களை சரிசெய்யமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; யெகோவாவை அறியார்கள். 5 இஸ்ரவேலின் அகந்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறி விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறி விழுவான். 6 அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார். 7 யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள். 8 கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள். 9 தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாக வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன். 10 யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் கடுங்கோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன். 11 எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான். 12 நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன். 13 எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது. 14 நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன். 15 அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள்.