மீதியானியர்கள் இஸ்ரவேல் மக்களை அடிமைப்படுத்துகிறார்கள்
கிழக்கிலும் வடக்கிலும் உள்ள இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்; கிதியோன் நியாயாதிபதியாகிறார்.
கி.மு. 1252
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 பின்னும் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது யெகோவா அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். 2 மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். 3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து; 4 அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள். 5 அவர்கள் தங்களுடைய மிருகஜீவன்களோடும், தங்களுடைய கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல திரளாக வருவார்கள்; அவர்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணமுடியாததாக இருக்கும்; இப்படியாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள். 6 இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள்.
ரூத்தின் கதை கி.மு. 1245
1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான். 2 அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு, அவனுடைய மனைவியின் பெயர் நகோமி, அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன், மற்றொருவன் பெயர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். 3 நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள். 4 இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள், மற்றவளுடைய பெயர் ரூத்; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள். 5 பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள். 6 யெகோவா தம்முடைய மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன்னுடைய மருமகள்களோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, 7 தன்னுடைய இரண்டு மருமகள்களோடு தான் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழியிலே நடந்துபோகும்போது, 8 நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, யெகோவா உங்களுக்கும் தயவுசெய்வாராக. 9 யெகோவா உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து: 10 உம்முடைய மக்களிடத்திற்கு உம்மோடு நாங்களும் வருவோம் என்றார்கள். 11 அதற்கு நகோமி: என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குக் கணவனாவதற்கு, இனிமேல் என் கர்ப்பத்தில் எனக்கு மகன்கள் பிறப்பார்களோ? 12 என் பிள்ளைகளே, திரும்பிப்போங்கள்; நான் வயதானவள்; ஒரு கணவனோடு வாழத் தகுதியுள்ளவள் அல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாகி, நான் இன்று இரவில் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றெடுத்தாலும், 13 அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, யெகோவாவுடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள். 14 அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாக அழுதார்கள்; ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தம் செய்துவிட்டுக் கடந்துபோனாள்; ரூத்தோ மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள். 15 அப்பொழுது அவள்: இதோ, உன்னுடைய சகோதரி தன்னுடைய மக்களிடத்திற்கும் தன்னுடைய தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ என்றாள். 16 அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். 18 அவள் தன்னோடு வர மனஉறுதியாக இருக்கிறதைக் கண்டு, அதன்பின்பு அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை. 19 அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். 20 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். 21 நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள். 22 இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள்.
2:1 நகோமிக்கு அவளுடைய கணவனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பெயருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். 2 மோவாபிய பெண்ணாகிய ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமோ, அவர் பின்னே போய் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள். 3 அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பின்னே பொறுக்கினாள்; தற்செயலாக அவள் சென்ற அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாக இருந்தது. 4 அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: யெகோவா உங்களோடு இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள். 5 பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான். 6 அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் மறுமொழியாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடு வந்த மோவாபியப் பெண்பிள்ளை. 7 அறுக்கிறவர்களின் பின்னே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடம் கேட்டுக்கொண்டாள்; காலை துவங்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரம்தான் ஆனது என்றான். 8 அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறு வயலுக்கு போகாமலும், இந்த இடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு இரு. 9 அவர்கள் அறுப்பு அறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பின்னே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களிடத்திற்குப் போய், வேலைக்காரர்கள் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான். 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள். 11 அதற்கு போவாஸ் மறுமொழியாக: உன் கணவன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், நீ பிறந்த தேசத்தையும் விட்டு, இதற்கு முன்னே நீ அறியாத மக்களிடம் வந்ததும் எல்லாம் எனக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டது. 12 உன் செயல்களுக்குத் தகுந்த பலனைக் யெகோவா உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய சிறகுகளின்கீழ் அடைக்கலமாக வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். 13 அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமமாக இல்லாவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளாகிய என்னோடு தயவாகப் பேசினீரே என்றாள். 14 பின்பு போவாஸ் சாப்பாட்டு நேரத்தில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்தைப் சாப்பிட, புளிப்பான திராட்சை ரசத்திலே உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் அருகில் உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீதியானதை வைத்துக்கொண்டாள். 15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஒன்றும் சொல்லவேண்டாம். 16 அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான். 17 அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாக இருந்தது. 18 அவள் அதை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமியார் பார்த்தாள்; தான் திருப்தியாகச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். 19 அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள். 20 அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற யெகோவாவாலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள். 21 பின்னும் மோவாபிய பெண்ணாகிய ரூத்: அவர் என்னை நோக்கி, என்னுடைய அறுவடை எல்லாம் முடியும்வரைக்கும், நீ என் வேலைக்காரிகளோடு இரு என்று சொன்னார் என்றாள். 22 அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனிதர்கள் உன்னை எதிர்க்காதபடி நீ அவனுடைய வேலைக்காரிகளோடு போகிறது நல்லது என்றாள். 23 அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் முடியும்வரைக்கும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடு இருந்து, தன் மாமியாரோடு வாழ்ந்தாள்.