தீர்க்கதரிசினியான தெபொராள் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கிறார்

வடக்கிலுள்ள இஸ்ரவேல் மக்கள் கானானியர்களுக்குப் பணிசெய்ய வைக்கப்படுகிறார்கள்; தீர்க்கதரிசினியான தெபொராள் நியாயாதிபதியாகிறார்.

கி.மு. 1305

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நியாயாதிபதிகள் 4

1 ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் யெகோவாவுடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள். 2 ஆகவே, யெகோவா அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியர்களுடைய ராஜாவின் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவனுடைய தளபதிக்கு சிசெரா என்று பெயர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான். 3 அவனுக்குத் 900 இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள். 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். 5 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சை மரத்தின் கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் மக்கள் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள். 6 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் மகன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி மனிதர்களிலும், செபுலோன் மனிதர்களிலும் 10,000 பேரை அழைத்துக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகவேண்டும் என்றும், 7 நான் யாபீனின் தளபதியாகிய சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய படைகளையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புகொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள். 8 அதற்குப் பாராக்: நீ என்னோடு வந்தால் போவேன்; என்னோடு வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். 9 அதற்கு அவள்: நான் உன்னோடு நிச்சயமாக வருவேன்; ஆனாலும் நீ போகிற பயணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; யெகோவா சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழுந்து, பாராக்கோடு கேதேசுக்குப் போனாள். 10 அப்பொழுது பாராக்: செபுலோன் மனிதர்களையும் நப்தலி மனிதர்களையும் கேதேசுக்கு வரவழைத்து, தனக்குப் பின்செல்லும் பத்தாயிரம்பேர்களோடு போனான்; தெபொராளும் அவனோடு போனாள். 11 கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஓபாபின் சந்ததியாக இருக்கிற கேனியர்களை விட்டுப் பிரிந்து, கேதேசின் அருகில் இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்களின் அருகே தன்னுடைய கூடாரத்தைப் போட்டிருந்தான். 12 அபினோகாமின் மகன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது, 13 சிசெரா தொள்ளாயிரம் இரும்பு ரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா மக்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்தான். 14 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; யெகோவா சிசெராவை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; யெகோவா உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னே 10,000 பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள். 15 யெகோவா சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் படைகள் அனைத்தையும் பாராக்குக்கு முன்பாகக் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாக ஓடிப்போனான். 16 பாராக் ரதங்களையும் படையையும் யூதர் அல்லாதவர்களுடைய அரோசேத்வரை துரத்தினான்; சிசெராவின் படையெல்லாம் பட்டயக்கூர்மையினால் விழுந்தது; ஒருவனும் மீதியாக இருக்கவில்லை. 17 சிசெரா கால்நடையாகக் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டிற்கும் சமாதானம் உண்டாயிருந்தது. 18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என்னுடைய ஆண்டவனே, என்னிடத்தில் உள்ளே வாரும், பயப்பட வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்; அப்படியே அவள் கூடாரத்தின் உள்ளே வந்தபோது, அவனை ஒரு போர்வையினாலே மூடினாள். 19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, தாகமாக இருக்கிறேன் என்றான்; அவள் பால் இருக்கும் தோல்பையை திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். 20 அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, எவராகிலும் ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடம் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். 21 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துபோனான். 22 பின்பு சிசெராவை பின்தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீ தேடுகிற மனிதனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவனுடைய தலையில் அடித்திருந்தது. 23 இப்படி தேவன் அந்த நாளிலே கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தினார். 24 இஸ்ரவேல் மக்களின் கை கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை அழிக்கும்வரைக்கும் அவன்மேல் பெலத்துக்கொண்டேயிருந்தது.

தெபொராள் மற்றும் பாராக்கின் பாடல் கி.மு. 1285

நியாயாதிபதிகள் 5

1 அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:

2 “யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும்,

மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.

3 ராஜாக்களே, கேளுங்கள்;

அதிபதிகளே, செவிகொடுங்கள்;

நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன்.

4 யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு,

ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது,

பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது,

மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.

5 யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது;

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.

6 ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும்,

யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள்

பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.

7 தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும்,

இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும்,

கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.

8 புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? 9 மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த

இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது;

யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்.

10 வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே,

வழியில் நடக்கிறவர்களே,

இதைப் பற்றி யோசியுங்கள்.

11 தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள்

அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும்,

அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த

நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்;

அதுமுதல் யெகோவாவின் மக்கள்

நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.

12 விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு;

பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே,

உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.

13 மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்;

யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.

14 அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது;

உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்;

மாகீரிலிருந்து அதிபதிகளும்,

செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.

15 இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்;

பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும்

பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்;

ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.

16 மந்தைகளின் சத்தத்தைக் கேட்க,

நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன?

ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.

17 கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்;

தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன?

ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி,

மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.

18 செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல்

மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.

19 ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்;

அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்;

அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.

20 வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று;

நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.

21 கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே,

அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே,

நீ பெலவான்களை மிதித்தாய்.

22 அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே,

பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.

23 மேரோசைச் சபியுங்கள்;

அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று

யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்;

அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை;

பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.

24 பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்;

கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.

25 தண்ணீரைக் கேட்டான்,

பாலைக் கொடுத்தாள்;

ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

26 தன்னுடைய கையால் ஆணியையும்,

தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து,

சிசெராவை அடித்தாள்;

அவனுடைய தலையில் உருவக்குத்தி,

அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.

27 அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்;

அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.

28 “சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து:

அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன?

அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள்.

29 அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:

30 அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ,

ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும்,

சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும்,

கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், என்

கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.

31 யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்;

அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.