அனுமதிக்கப்பட்ட உணவுகளும் பிறருடைய நன்மையும்

நற்செய்தியின் கீழ் எல்லா உணவுகளும் அனுமதிக்கப்பட்டவை என்று பவுல் உறுதிப்படுத்தினாலும், பிறரைக் கட்டியெழுப்புவதற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் அவை எல்லாம் உகந்தவை அல்ல என்று கள்ளப் போதகர்களுக்கு எதிராக அறிவிக்கிறார். பலவீனமான சகோதரர்களின் மனச்சாட்சிக்குப் புண்பாடு ஏற்படாதவரை, இறைச்சிச் சந்தையில் விற்கப்படுவதையோ புறமதத்தவரின் மேசையில் வைக்கப்படுவதையோ கொரிந்தியர்கள் உண்ணலாம். தன்னளவில் சரியும் தவறும் அல்லாத செயல்களில்கூட, கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த விருப்பங்களைவிட தேவனுடைய மகிமையையும் பிறருடைய நன்மையையும் நாட வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றிய பவுலின் தன்னலமற்ற தன்மையைப் பின்பற்ற அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

கி.பி. 57

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 கொரிந்தியர் 10:23–11:1

23 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் பக்திவளர்ச்சியை உண்டாக்காது. 24 ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தைத் தேடவேண்டும். 25 கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிச்சாப்பிடுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. 26 பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. 27 அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். 28 ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. 29 உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன? 30 மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்? 31 ஆகவே, நீங்கள், சாப்பிட்டாலும் குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 32 நான் என் சொந்தப் பிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லோருக்கும் பிரியமாக நடக்கிறதுபோல; 33 நீங்களும் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், தேவனுடைய சபைக்கும் இடறல் இல்லாதவர்களாக இருங்கள்.

11:1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள்.

பெண்கள் முக்காடின்றித் தோன்றுவதைப் பவுல் தடைசெய்கிறார்

தமது அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதற்காகப் பவுல் அவர்களைப் பாராட்டுகிறார். எல்லா ஆண்களும் கிறிஸ்துவுக்கும், பெண் ஆணுக்கும், கிறிஸ்து தேவனுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்பதைக் காட்டி, அந்த அறிவுரைகளின் தன்மையை விளக்குகிறார். முக்காடு தாழ்ந்த நிலையையும் கீழ்ப்படிதலையும் குறிக்கும் அடையாளமாக இருப்பதால், பெண்கள் முக்காடின்றித் தோன்றுவது தடைசெய்யப்படுகிறது.

1 கொரிந்தியர் 11:2–16

2 சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன். 3 ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 4 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான். 5 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே. 6 பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். 7 ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள். 8 ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள். 9 ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள். 10 ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். 11 ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை. 12 பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது. 13 பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14 ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும், 15 பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. 16 ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.

கர்த்தருடைய இராப்போஜனத்தில் ஒழுங்கீனத்தைப் பவுல் கண்டிக்கிறார்

கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்கக் கூடும்போது அவர்களிடையே பிரிவினைகளும் தனித்தனி குழுக்களும் இருப்பதற்காகப் பவுல் அவர்களைக் கண்டிக்கிறார். அவர்கள் ஒரே இடத்தில் கூடுவது மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர ஒன்றிணைந்து, ஒரே சரீரமாகக் கர்த்தருடைய இராப்போஜனத்தைப் பெற வேண்டும். சபைக்குள் உணவைக் கொண்டுவந்து கர்த்தருடைய இராப்போஜனத்துடன் சேர்ப்பதன் மூலம் பரிசுத்த நியமத்தை அவமதிப்பதற்காக அவர் அவர்களைக் கண்டிக்கிறார். இந்த ஒழுங்கீனங்களைச் சரிசெய்ய, திருவிருந்து எவ்வாறு நிறுவப்பட்டது என்பதைப் பவுல் கூறி, அதை முறையாக அனுசரிப்பதற்கான வழிமுறைகளையும் வழங்குகிறார்.

1 கொரிந்தியர் 11:17–34

17 உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே. 18 முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். 19 உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. 20 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான். 21 இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே. 22 சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன். 23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 26 ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 27 இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான். 28 எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும். 29 ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான். 30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். 31 நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம். 32 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். 33 ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 34 நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.