யோசியாவின் சமயச் சீர்திருத்தம்

கி.மு. 624

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 23:4–21

4 பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் செய்யப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து வெளியேற்ற, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் பகுதியிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு வெளியே கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச்செய்தான். 5 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபம்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபம்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான். 6 தோப்பு விக்கிரகத்தை யெகோவாவின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்கு வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்றின் ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளைப் பொதுமக்களுடைய பிரேதக் குழிகளின்மேல் போடச்செய்தான். 7 யெகோவாவின் ஆலயத்திற்கு அருகே பெண்கள் தோப்பு விக்கிரகத்திற்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள அவமானமான ஆண் விபசாரக்காரர்களின் வீடுகளை இடித்துப்போட்டான். 8 அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியர்களையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாவரை ஆசாரியர்கள் தூபம்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, பட்டணத்தின் நுழைவாயில்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான். 9 மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரர்களுக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களை சாப்பிடுவதற்குமாத்திரம் அனுமதிபெற்றார்கள். 10 ஒருவனும் மோளேகுக்கென்று தன் மகனையாகிலும் தன் மகளையாகிலும் நெருப்பிலே பலியிடாமலிருக்க, பென் இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் இடத்தையும் அவன் தீட்டாக்கி, 11 யெகோவாவின் ஆலயத்திற்குள் போகிற இடம்துவங்கி, பட்டணத்திற்கு வெளியே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுவரை யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான். 12 யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான். 13 எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியர்களின் அருவருப்பாகிய பெண் விக்கிரக தெய்வமாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியர்களின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோனியர்களின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி, 14 சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் இடத்தை மனிதர்களின் எலும்புகளால் நிரப்பினான். 15 இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான். 16 யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனிதன் கூறின யெகோவாவுடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான். 17 அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனிதர்கள்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாகக் கூறி அறிவித்த தேவனுடைய மனிதனின் கல்லறை என்றார்கள். 18 அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவனுடைய எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள். 19 யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து, 20 அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனிதர்களின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான். 21 பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையை ஆசரியுங்கள் என்று சகல மக்களுக்கும் கட்டளையிட்டான்.

2 நாளாகமம் 34:33

33 யோசியா இஸ்ரவேல் மக்களுடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி. இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கச் செய்தான்; அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவர்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவைவிட்டுப் பின்வாங்கினதில்லை.

யோசியா பஸ்காவை அனுசரிக்கிறார் கி.மு. 623

பஸ்கா கொண்டாட்டம்.

2 நாளாகமம் 35:1–19

1 அதற்குப்பின்பு யோசியா எருசலேமிலே யெகோவாவுக்கு பஸ்காவை அனுசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். 2 அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தில் ஆராதனை செய்ய ஒழுங்குபடுத்தி, 3 இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியர்களை நோக்கி: பரிசுத்தப்பெட்டியை தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதை சுமக்கும் பொறுப்பு உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியம்செய்து, 4 இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் மகனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஏற்றபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி, 5 மக்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த இடத்திலே முன்னோர்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று, 6 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்செய்து, மோசேயைக்கொண்டு யெகோவா சொன்னபடியே உங்கள் சகோதரர்கள் செய்வதற்கு, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான். 7 வந்திருந்த மக்கள் எல்லோருக்கும், அவர்கள் எண்ணிக்கையின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய செல்வத்திலிருந்து கொடுத்தான். 8 அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக மக்களுக்கும் ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய மேற்பார்வையாளர்களாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்கு பஸ்கா பலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள். 9 கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரர்களும், அஷபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியர்களின் பிரபுக்களும், லேவியர்களுக்கு பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள். 10 இப்படி ஆராதனை ஆயத்தம் செய்யப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்திலும், லேவியர்கள் தங்கள் பிரிவுகளின் வரிசையிலும் நின்று, 11 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர்கள் தோலுரித்தார்கள். 12 மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி மக்கள் யெகோவாவுக்குப் பலி செலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களை முன்னோர்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாக அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள். 13 அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, மக்களுக்கெல்லாம் விரைவாகப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். 14 பின்பு தங்களுக்காகவும் ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் கொழுப்பையும் செலுத்துகிறதில், இரவு வரை வேலையாயிருந்ததால், லேவியர்கள் தங்களுக்காகவும், ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள். 15 தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் சந்ததியாராகிய பாடகர்கள் தங்களுடைய இடத்திலும், வாசல்காவலாளர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகமுடியாமலிருந்தது; லேவியரான அவர்களுடைய சகோதரர்கள் அவர்களுக்காக ஆயத்தம் செய்தார்கள். 16 அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை அனுசரிக்கிறதற்கும், யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும் அடுத்த யெகோவாவுடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் முறைப்படி செய்யப்பட்டது. 17 அங்கே வந்திருந்த இஸ்ரவேல் மக்கள் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாட்களும் அனுசரித்தார்கள். 18 தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் துவங்கி, இஸ்ரவேலிலே அதைப்போல பஸ்கா அனுசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதா அனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் மக்களும் அனுசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் அனுசரித்ததில்லை. 19 யோசியாவுடைய அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே இந்த பஸ்கா அனுசரிக்கப்பட்டது.