மக்களின் பின்வாங்குதலை எரேமியா கண்டிக்கிறார்
யோசியாவின் சீர்திருத்தத்திற்குப் பிறகு மக்கள் பின்வாங்கியதற்காக எரேமியா அவர்களைக் கண்டிக்கிறார்.
கி.மு. 612
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
6 யோசியா ராஜாவின் நாட்களில் யெகோவா என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான எல்லா மலையின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்செய்தாள். 7 அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள். 8 சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்செய்த காரணங்கள் எல்லாவற்றுக்காகவும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதல் சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்செய்தாள், இதை நான் கண்டேன். 9 பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினால் தேசம் தீட்டுப்பட்டுப்போனது; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் செய்துகொண்டிருந்தாள் என்றார். 10 இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார். 11 பின்னும் யெகோவா என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள். 12 நீ போய் வடதிசையை நோக்கி சொல்லவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கச்செய்வதில்லை; நான் கிருபையுள்ளவரென்று யெகோவா சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன். 13 நீயோ, உன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்த் துரோகம்செய்து, பச்சையான எல்லா மரத்தின்கீழும் அந்நியருடன் சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்தைக் கேட்காமல்போனதையும் ஒத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார். 14 சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களை சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து, 15 உங்களுக்கு என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியுடனும் மேய்ப்பார்கள். 16 நீங்கள் தேசத்தில் பெருகிப் பலுகுகிற அந்நாட்களில், அவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி யென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனி சரிசெய்யப்படுவதும் இல்லை என்று யெகோவா சொல்லுகிறார். 17 அக்காலத்தில் எருசலேமை யெகோவாவுடைய சிங்காசனம் என்பார்கள்; எல்லா தேசத்தாரும் எருசலேமில் விளங்கிய யெகோவாவுடைய பெயருக்காக அதனுடன் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் விருப்பத்தின்படி நடக்கமாட்டார்கள். 18 அந்நாட்களில் யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாருடன் சேர்ந்து, அவர்கள் ஏகமாக பாபிலோன் தேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள். 19 நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையில் வைத்து, தேசங்களுக்குள்ளே நல்ல சொந்தமான தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன். 20 ஒரு மனைவி தன் கணவனுக்குத் துரோகம்செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது உண்மை என்று யெகோவா சொல்லுகிறார். 21 இஸ்ரவேல் மக்கள் தங்கள் வழியை மாற்றி, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்ததினால் அழுதுகொண்டு விண்ணப்பம் செய்யும் சத்தம் உயர்ந்த இடங்களில் கேட்கப்படும். 22 ஒழுக்கம்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் ஒழுக்ககேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய யெகோவா. 23 குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது வீண் என்பது மெய்; இஸ்ரவேலின் பாதுகாப்பு எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் இருப்பது என்பது உண்மையே. 24 இந்த வெட்கமானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் மகன்களையும் மகள்களையும் அழித்துப்போட்டது. 25 எங்கள் வெட்கத்தில் கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சொல்லைக் கேட்காமலும்போனோம்.
சிறையிருப்பின் துயரங்களை எரேமியா முன்னரே காண்கிறார்
எரேமியா ஒரு தீர்க்கதரிசியாக, வரவிருக்கும் சிறையிருப்பின் துயரங்களை முன்கூட்டியே விவரிக்கிறார்.
1 இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. 2 நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள். 3 யூதா மக்களுடனும், எருசலேம் மக்களுடனும் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். 4 யூதா மனிதர்களே, எருசலேமின் குடிமக்களே, உங்கள் செயல்களுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல எழும்பி, அணைப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் யெகோவாவாக்கென்று உங்களை. முற்றிலுமாய் அர்ப்பணியுங்கள்.
5 தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள். 6 சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா அழிவையும் வரச்செய்கிறேன். 7 உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார். 8 இதினிமித்தம் சணல் ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே. 9 அந்நாளில் ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் சோர்ந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 10 அப்பொழுது நான்: ஆ! யெகோவாவாகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், உண்மையாகவே இந்த மக்களுக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரச்செய்தீர்; பட்டயம் ஜீவன்வரை எட்டுகிறதே என்றேன். 11 வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது. 12 இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களுடன் நியாயம் பேசுவேன். 13 இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ, நாம் பாழாக்கப்படுகிறோமே. 14 எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும். 15 தாண் பட்டணத்திலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்செய்கிறது. 16 தேசங்களுக்கு அதை நீங்கள் பிரபலப்படுத்துங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள். 17 அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தது என்று யெகோவா சொல்லுகிறார். 18 உன் நடக்கையும் உன் செயல்களுமே இவைகளை உனக்கு சம்பவிக்கச்செய்தன; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயம்வரை எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே. 19 என் குடல்கள், என் குடல்களே வலிக்கிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமைதலாக இருக்கமுடியாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், போரின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே. 20 நாசத்திற்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; திடீரென்று என் கூடாரங்களும், ஒரு நிமிடத்தில் என் திரைகளும் பாழாக்கப்படுகிறது. 21 நான் எதுவரைக்கும் யுத்தத்தின் கொடியைக் கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன். 22 என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். 23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. 24 மலைகளைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன. 25 பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. 26 மேலும் நான் பார்க்கும்போது, யெகோவாவாலும், அவருடைய கடுங்கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்திரமானது; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோனது. 27 தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். 28 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை. 29 குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் எல்லா ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனிதனும் அவைகளில் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும். 30 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள். 31 கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்முறை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், மகளாகிய சீயோனின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ, கொலைபாதகர்களால் என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.