எரேமியா மனந்திரும்ப அழைத்துப் புலம்புகிறார்

எரேமியா மக்களை மனந்திரும்பும்படி வலியுறுத்துகிறார்; சிறையிருப்பு நெருங்கிவரும்போது அவர்களுடைய துயரங்களுக்காகப் புலம்புகிறார்.

கி.மு. 612

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எரேமியா 7–8

1 யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2 நீ யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலில் நின்று, அங்கே அறிவித்துச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், யெகோவாவைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே நுழைகிற யூத மக்களாகிய நீங்களெல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 3 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த இடத்தில் குடியிருக்கச்செய்வேன். 4 யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள். 5 நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் நன்றாக ஒழுங்குபடுத்தி, நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, 6 அந்நியதேசத்தாரையும், அனாதையானவனையும், விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், 7 அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன். 8 இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள். 9 நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்செய்து, பொய்சாட்சி சொல்லி, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, 10 அதன்பின்பு வந்து, என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயத்தில் எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? 11 என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையானதோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். 12 நான் முதலில் என் பெயர் விளங்கச்செய்ய சீலோவிலுள்ள என் இடத்திற்கு நீங்கள் போய், இஸ்ரவேல் மக்களுடைய பொல்லாப்புக்காக நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள். 13 நீங்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்திரவுகொடாமலும் போனதினால், 14 என் பெயர் சூட்டப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்திற்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த இடத்திற்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன். 15 நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 16 நீ இந்த மக்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் நீ சொல்வதைக் கேட்பதில்லை. 17 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா? 18 எனக்கு மனவேதனையுண்டாக அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றுகிறார்கள்; அவர்கள் வானராணிக்குப் பணியாரங்களைச் சுடுவதற்காகப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாப்பிசைகிறார்கள். 19 அவர்கள் எனக்கா மனவேதனையுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்திற்குள்ளாக அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனவேதனையுண்டாக்குகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 20 ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த இடத்தின்மேலும், மனிதர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் பழங்கள்மேலும் ஊற்றப்படும்; அது அணையாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 21 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்ற பலிகளுடன், இறைச்சியைச் சாப்பிடுங்கள். 22 நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளில், தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களுடன் பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும், 23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழிகளிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாவதற்காக நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன். 24 அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்நோக்கியல்ல பின்நோக்கியே போனார்கள். 25 உங்கள் முற்பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்வரை நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன். 26 ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் முற்பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள். 27 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உன் சொல்லைக் கேட்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்திரவு கொடுக்கமாட்டார்கள். 28 ஆகையால் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்கள் இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து இல்லாமல் போனதென்றும் அவர்களுக்குச் சொல். 29 நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்ந்த இடங்களில் புலம்பிக்கொண்டிரு; யெகோவா தமது கோபத்திற்கு ஏதுவான சந்ததியை வெறுத்துத் தள்ளிவிட்டார்.

30 யூதா மக்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள். 31 தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் நெருப்பால் எரிப்பதற்காக, அவர்கள் இன்னோம் மகனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. 32 ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் மகனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், அழிவின் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்தில் இடம் கிடைக்காமற்போகும்வரை பிணங்களை அடக்கம் செய்வார்கள். 33 இந்த மக்களின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்; அவைகளை விரட்டுவாரும் இல்லாதிருப்பார்கள். 34 நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் சிரிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன்; தேசம் அழியும்.

8:1 அக்காலத்தில் யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும் எருசலேமுடைய குடிமக்களின் எலும்புகளையும், அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுத்து, 2 அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், தேடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்செய்யப்படாமல் பூமியின்மேல் எருவாகும். 3 இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

4 நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ? 5 ஆனாலும் எருசலேமியராகிய இந்த மக்கள் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள். 6 நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; போருக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள். 7 ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் மக்களோ யெகோவாவின் நியாயத்தை அறியார்கள் என்று யெகோவா உரைக்கிறாரென்று சொல். 8 நாங்கள் ஞானிகளென்றும், யெகோவாவுடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. 9 ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது? 10 ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து, 11 சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். 12 தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? ஆனால் வெட்கப்படமாட்டார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 13 அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; திராட்சைச்செடியில் குலைகள் இராது, அத்திமரத்தில் பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல். 14 நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் நுழைந்து, அங்கே சங்காரமாவோம்; நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அழித்து, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார். 15 சமாதானத்திற்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து. 16 தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்சு சத்தம் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த குதிரைகள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் மக்களையும் பட்சிப்பார்கள். 17 மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். 18 நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலவீனமாயிருக்கிறது. 19 இதோ, சீயோனில் யெகோவா இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் மக்களாகிய மகள் தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார். 20 அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ காப்பாற்றப்படவில்லை. 21 என் மக்களாகிய மகளின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது. 22 கீலேயாத்திலே பிசின் தைலமருந்து இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் மக்களாகிய மகள் சுகமடையாமற்போனாள்?