எரேமியா மனந்திரும்ப அழைத்துப் புலம்புகிறார் (continued)
எரேமியா மக்களை மனந்திரும்பும்படி வலியுறுத்துகிறார்; சிறையிருப்பு நெருங்கிவரும்போது அவர்களுடைய துயரங்களுக்காகப் புலம்புகிறார்.
கி.மு. 612
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன். 2 ஆ, வனாந்திரத்தில் வழிப்போக்கரின் தங்குமிடம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் மக்களைவிட்டு, அவர்களிடத்தில் இருக்காமல் போய்விடுவேன்; அவர்களெல்லோரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள். 3 அவர்கள் பொய்யைப் பயன்படுத்தத்தக்க தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்தில் பலப்படுவது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 4 நீங்கள் அவனவன் தன்தன் நண்பனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்த சகோதரனும் மோசம்செய்கிறான், எந்த சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். 5 அவர்கள் உண்மையைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை திட்டுகிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமம் செய்ய உழைக்கிறார்கள். 6 வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 7 ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; என் மக்களாகிய மகளை வேறெந்தமுறையாக நடத்துவேன்? 8 அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது பொய் பேசுகிறது; அவனவன் தன்தன் அருகிலுள்ளவனிடம் தன்தன் வாயினால் சமாதானமாகப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்தில் அவனைக் கொல்ல சதி செய்கிறான். 9 இதற்காக அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார். 10 மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்திரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாமலிருக்க அவைகள் அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; வானத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போனது. 11 நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன். 12 இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று யெகோவாவுடைய வாய் தன்னுடன் சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்? 13 நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும், 14 தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் முற்பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று யெகோவா சொல்லுகிறார். 15 ஆதலால், இதோ, நான் இந்த மக்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுத்து, 16 அவர்களும், அவர்கள் முற்பிதாக்களும் அறியாத மக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை அழிக்கும்வரை அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 17 நீங்கள் யோசனைசெய்து, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதில் பழகின பெண்களைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 18 அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்களில் கண்ணீர் வடியவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடுமளவும், ஒப்பாரி சொல்வார்களாக. 19 எவ்வளவாக அழிக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் இருப்பிடங்களை அவர்கள் இடித்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து ஏற்படுகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். 20 ஆதலால் பெண்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் காது அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் மகள்களுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள். 21 வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற வாலிபரையும் அழிக்கும் மரணம், நம்முடைய ஜன்னல்களிலேறி, நம்முடைய அரண்மனைகளில் நுழைந்தது. 22 மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று யெகோவா சொன்னாரென்று சொல். 23 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; 24 மேன்மைபாராட்டுகிறவன் பூமியில் கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற யெகோவா நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டுவானாக என்று யெகோவா சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். 25 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களுடன் விருத்தசேதனமுள்ள அனைவரையும், 26 எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் மக்களையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்திரக்குடிகளான அனைவரையும் தண்டிப்பேன்; அந்நியமக்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்தில் மாற்றமி ல்லாதவர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
10:1 இஸ்ரவேல் வீட்டாரே, யெகோவா உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: 2 அன்னியமக்களுடைய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களால் அந்நியமக்கள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளால் கலங்காதிருங்கள். 3 மக்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாளுகிற உளியினால் செதுக்கப்படும். 4 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடி அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். 5 அவைகள் பனையைப் போல உயரமாக நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்காது. எனவே சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யமுடியாது, நன்மை செய்யவும் அவைகளுக்கு பெலனில்லையென்று யெகோவா சொல்லுகிறார். 6 யெகோவாவே, உமக்கு நிகரானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது பெயர் வல்லமையில் பெரியது. 7 தேசங்களின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீர் ஒருவருக்கே பயப்படவேண்டியது; மக்களுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா தேசத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. 8 அவர்கள் அனைவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது. 9 தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடை; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது. 10 யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள். 11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராமல் அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். 12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். 13 அவர் சத்தமிடும்போது வானத்தில் திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லையிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது கிடங்குகளிலிருந்து புறப்படச்செய்கிறார். 14 மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த உருவங்களால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. 15 அவைகள் மாயையும், மகா பொய்யான செயல்களாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும். 16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சொந்தமான கோத்திரம்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
17 கோட்டையில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். 18 இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிமக்களைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 19 ஐயோ, நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். 20 என் கூடாரம் அழிந்துபோனது, என் கயிறுகளெல்லாம் அறுந்துபோனது; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை. 21 மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, யெகோவாவை தேடாமல் போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது. 22 இதோ, யூதாவின் பட்டணங்களை அழித்து வலுசர்ப்பங்களின் தங்கும் இடமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.
23 யெகோவாவே, மனிதனுடைய வழி அவனால் ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனால் ஆகிறதல்லவென்றும் அறிவேன். 24 யெகோவாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமானப்படாமலிருக்க உம்முடைய கோபத்தினால் அல்ல, குறைவாகத் தண்டியும். 25 உம்மை அறியாத தேசங்களின்மேலும், உமது பெயரைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபை அழித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் குடியிருப்புகளை அழித்தார்களே.