அசீரியப் படையெடுப்பைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கிறார் (continued)
அசீரியப் படை பாலஸ்தீனத்தின்மீது படையெடுப்பதைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.
கி.மு. 715
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். 2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். 3 யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், 4 நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார். 5 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். 6 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒன்றாக இருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். 7 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். 8 பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். 9 என் பரிசுத்த மலையெங்கும் தீமை செய்வாருமில்லை; கெடுதல் செய்வாருமில்லை; சமுத்திரம் தண்ணீனால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். 10 அக்காலத்திலே, மக்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக மக்கள்கூட்டம் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தங்கும் இடம் மகிமையாயிருக்கும். 11 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி, 12 மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். 13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான். 14 அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள். 15 எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார். 16 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
12:1 அக்காலத்திலே நீ சொல்வது:
“யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்;
நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது;
நீர் என்னைத் தேற்றுகிறீர்.
2 இதோ, தேவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;
கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்;
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து
மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது:
யெகோவாவை துதியுங்கள்;
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்;
அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்;
அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள்.
5 யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள்,
அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்;
இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
6 சீயோனில் குடியிருக்கிறவளே,
நீ சத்தமிட்டுக் கெம்பீரி;
இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
13:1 ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி. 2 உயர்ந்த மலையின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு மக்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் நுழைவதற்குச் சைகை காட்டுங்கள். 3 நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார். 4 திரளான மக்களின் சத்தத்தைப்போன்ற கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட மக்களுடைய தேசங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் யெகோவா போர்ப் படையை எண்ணிக்கை பார்க்கிறார். 5 யெகோவா வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது. 6 அலறுங்கள், யெகோவாவின் நியாயத்தீர்ப்பின்நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா அழிவாக வரும். 7 ஆதலால் எல்லாக் கைகளும் தளர்ந்து, எல்லா மனிதரின் இருதயமும் கரைந்துபோகும். 8 அவர்கள் பயமடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் திகைத்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும். 9 இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் யெகோவாவுடைய நாள் கடுமையும், மூர்க்கமும், மிகுந்த கோபமுமாக வருகிறது. 10 வானத்தின் நட்சத்திரங்களும் விண்மீன்களும் ஒளி கொடாமலிருக்கும்; சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாமலிருக்கும். 11 பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன். 12 மக்களைப் பசும்பொன்னிலும், மனிதனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன். 13 இதனால் சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன். 14 துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் மக்களிடத்திற்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள். 15 பிடிபட்ட எவனும் குத்தப்பட்டு, அவர்களைச் சேர்ந்திருந்த எவனும் பட்டயத்தால் விழுவான். 16 அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள். 17 இதோ, நான் அவர்களுக்கு விரோதமாக மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதிக்காமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும், 18 வில்லுகளால் இளைஞர்களை கொன்றுவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் மனமிரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை. 19 நாடுகளுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். 20 இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கியிருப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர்கள் மந்தையை கூட்டுவதுமில்லை. 21 காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும். 22 அவர்கள் பாழான மாளிகைகளில் நரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் சேதப்படுத்தின அரண்மனைகளில் ஒன்றாகக் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடிக்காது என்கிறார்.