தீருவின் அழிவை ஏசாயா முன்னறிவிக்கிறார்

கி.மு. 715

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏசாயா 23

1 தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. 2 தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள். 3 சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது. 4 சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெற்றெடுப்பதும் இல்லை; இளைஞர்களை வளர்க்கிறதும் இல்லை; கன்னிப்பெண்களை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது. 5 எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும். 6 கடற்கரைக் குடிமக்களே, நீங்கள் தர்ஷீஸ்வரை புறப்பட்டுப்போய் அலறுங்கள். 7 ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும். 8 கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே. 9 சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் அனைவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் யெகோவாவே இதை யோசித்துத் தீர்மானித்தார். 10 தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை. 11 யெகோவா தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து: 12 ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார். 13 கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார். 14 தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது. 15 அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருடங்கள் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருடங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும். 16 மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு. 17 எழுபது வருடங்களின் முடிவிலே யெகோவா வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் லாபத்திற்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள அநேக தேசங்களுடனும் வேசித்தனம்செய்யும். 18 அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.

அசீரியப் படையெடுப்பைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கிறார்

அசீரியப் படை பாலஸ்தீனத்தின்மீது படையெடுப்பதைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ஏசாயா 10:5–34

5 என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம். 6 அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன். 7 அவனோ அப்படி நினைக்கிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் மக்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான். 8 அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ? 9 கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ? 10 எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க, 11 நான் சமாரியாவுக்கும், அதின் சிலைகளுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் சிலைகளுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்கிறான். 12 ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார். 13 அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிமக்களைத் தாழ்த்தினேன். 14 ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை மக்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் இறக்கையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்கிறான். 15 கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைப் பயன்படுத்துகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினதுபோலவும் இருக்குமே. 16 ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய யெகோவா, அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார். 17 இஸ்ரவேலின் ஒளியான தேவனானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் எரித்து அழித்து, 18 அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும். 19 காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.

20 அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவையே உண்மையாகச் சார்ந்துகொள்வார்கள். 21 மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள். 22 இஸ்ரவேலே, உனது மக்கள் கடலின் மணலளவு இருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும். 23 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார். 24 ஆகையால் சீயோனில் குடியிருக்கிற என் மக்களே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான். 25 ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். 26 ஓரேப் கன்மலையின் அருகிலே மீதியானியர்கள் வெட்டுண்டதுபோல் சேனைகளின் யெகோவா அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரச்செய்து, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார். 27 அந்நாளில் உன் தோளிலிருந்து அவன் சுமையும், உன் கழுத்திலிருந்து அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும். 28 அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான். 29 கணவாயைத் தாண்டி, கேபாவிலே முகாமிடுகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது. 30 காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு. 31 மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள். 32 இனி ஒருநாள் நோபிலே தங்கி, மகளாகிய சீயோனின் மலைக்கும், எருசலேமின் மேட்டிற்கும் விரோதமாகக் கை நீட்டி மிரட்டுவான். 33 இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும். 34 அவர் காட்டின் மரங்களின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.