பத்துக் கோத்திரங்களின் சிறையிருப்பை ஓசியா முன்னறிவிக்கிறார் (continued)

பத்துக் கோத்திரங்களின் சிறையிருப்பை ஓசியா முன்னறிவித்து, மனந்திரும்பும்படி மக்களை வலியுறுத்துகிறார்.

கி.மு. 725

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஓசியா 9–11

1 இஸ்ரவேலே, மகிழ்ச்சியாக இருக்காதே; மற்ற மக்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ வழிவிலகிப்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் கூலியை நாடுகிறாய். 2 தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும். 3 அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் சாப்பிடுவார்கள். 4 அவர்கள் யெகோவாவுக்குத் திராட்சைரசத்தின் பானபலியை ஊற்றுவதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாக இருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைச் சாப்பிடுகிற அனைவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கே உரியது, அது யெகோவாவுடைய ஆலயத்தில் வருவதில்லை. 5 ஆசரிப்பு நாளிலும், யெகோவாவுடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்? 6 இதோ, அவர்கள் அழிவிற்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம் செய்யும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் நெருஞ்சிமுட்செடிகளுக்குச் சொந்தமாகும்; அவர்களுடைய குடியிருப்புகளில் முட்செடிகள் முளைக்கும். 7 விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள். 8 எப்பிராயீமின் காவற்காரர்கள் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான். 9 கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். 10 வனாந்திரத்தில் திராட்சைக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்முறை பழுத்த பழங்களைப்போல உங்கள் முற்பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோரிடம் போய், இழிவானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். 11 எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதும் இல்லை, கர்ப்பமடைவதும் இல்லை. 12 அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனிதர்கள் இல்லாதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகும்போது அவர்களுக்கு ஐயோ, 13 நான் எப்பிராயீமைத் தீருவின் திசைவரை இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான இடத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர்கள் தங்கள் மகன்களைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள். 14 யெகோவாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பால் இல்லாத முலைகளையும் கொடும். 15 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள். 16 எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன். 17 அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனதினால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய மக்களுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.

10:1 இஸ்ரவேல் பலனற்ற திராட்சைச்செடி, அது தனக்குத்தானே பழங்களைக் கொடுக்கிறது; அவன் தன் பழங்களின் பெருக்கத்திற்குச் சரியாகப் பலிபீடங்களை அதிகமாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்பிற்குச் சரியாகச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள். 2 ஏமாற்றுகிற இருதயம் அவர்களுக்கு இருக்கிறது; இப்போதும் குற்றம் சுமத்தப்படுவார்கள்; அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய சிலைகளை நாசமாக்குவார். 3 நாம் யெகோவாவுக்குப் பயப்படாமற்போனதினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள். 4 பொய்யாகச் சத்தியம் செய்கிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை செய்துகொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் உழவுசால்களில் விஷச் செடிகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும். 5 சமாரியாவின் குடிமக்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் மக்களும், அதின் பூசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கம்கொண்டாடுவார்கள். 6 அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவிற்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் அவமானமடைவான்; இஸ்ரவேல் தன் மர விக்கிரங்களினால்வெட்கப்படுவான். 7 சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான். 8 இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; மலைகளைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்வார்கள். 9 இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்களிலிருந்து பாவம்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிமக்காரர்கள்மேல் வந்த போர் தங்களைக் நெருங்குவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள். 10 நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினாலே கட்டப்படும்போது, மக்கள் அவர்களுக்கு விரோதமாகக் கூடுவார்கள். 11 எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற இளம்கன்றாக இருக்கிறான்; ஆனாலும் நான் அவனுடைய அழகான கழுத்தின்மேல் பாரத்தை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்கு வயலை சமப்படுத்துவான். 12 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கு ஏற்றபடி அறுப்பு அறுங்கள்; உங்களுடைய தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; யெகோவா வந்து உங்கள்மேல் நீதியைப் பொழியச்செய்யும்வரை, அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. 13 அநியாயத்தை உழுதீர்கள், அநீதியை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைச் சாப்பிட்டீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் திறமைசாலிகளின் கூட்டத்தையும் நம்பினீர்கள். 14 ஆகையால் உங்கள் மக்களுக்குள் குழப்பம் எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா பாதுகாப்புகளும் அழிக்கப்படும். 15 உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் அழிக்கப்படுவான்.

11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய மகனை வரவழைத்தேன். 2 அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்திற்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். 3 நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். 4 மனிதரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த பாரத்தை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பக்கமாக சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன். 5 மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்து தேசத்திற்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா. 6 ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினால் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை அழியச்செய்து, அவர்களை எரித்துப்போடும். 7 என் மக்கள் என்னைவிட்டு விலகுகிற வேறுபாட்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. 8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போல் ஆக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாகப் பொங்குகிறது. 9 என் கடுங்கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனிதனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் கடுங்கோபத்தோடு உன்னிடத்தில் நான் வரமாட்டேன். 10 அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள். 11 எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 12 எப்பிராயீமர்கள் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; யூதாவோவென்றால் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான்.