பத்துக் கோத்திரங்களின் சிறையிருப்பை ஓசியா முன்னறிவிக்கிறார் (continued)

பத்துக் கோத்திரங்களின் சிறையிருப்பை ஓசியா முன்னறிவித்து, மனந்திரும்பும்படி மக்களை வலியுறுத்துகிறார்.

கி.மு. 725

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஓசியா 12–14

1 எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது. 2 யூதாவோடும் யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். 3 அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். 4 அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். 5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம். 6 இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. 7 அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான். 8 எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான். 9 உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், மீண்டும் உன்னைக் கூடாரங்களில் தங்கியிருக்கச்செய்வேன். 10 அப்படியே தீர்க்கதரிசிகளுடன் சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை கொடுத்தேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன். 11 கீலேயாத் அக்கிரமத்தின் இடமோ? ஆம், அவர்கள் பொய்யரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது. 12 யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக வேலைசெய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். 13 யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான். 14 எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த இகழ்ச்சியை அவன்மேல் திருப்புவார்.

13:1 எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான். 2 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள். 3 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள். 4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை. 5 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்திரத்திலே அறிந்துகொண்டேன். 6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள். 7 ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன். 8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும். 9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்?. 10 எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே? 11 நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன். 12 எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. 13 பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை. 14 அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். 15 இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும். 16 சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும்.

14:1 இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். 2 வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம். 3 அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். 4 நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாகச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கினது. 5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல் இருப்பேன்; அவன் லீலி மலரைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். 6 அவனுடைய கிளைகள் ஓங்கிப் படரும், அவனுடைய அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும். 7 அவனுடைய நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சைச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவனுடைய வாசனை லீபனோனுடைய திராட்சைரசத்தின் வாசனையைப்போல இருக்கும். 8 இனி எனக்கும் சிலைகளுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்வான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு மரத்தைப்போல் இருக்கிறேன்; என்னாலே உன்னுடைய கனி உண்டானது என்று எப்பிராயீம் சொல்வான். 9 இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க புத்தியுள்ளவன் யார்? யெகோவாவுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; கலகக்காரர்களோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.