ஈராம் தாவீதை வாழ்த்துதல்

ஈராம் தாவீதை வாழ்த்துகிறார். பெலிஸ்தர்கள் படையெடுக்கிறார்கள்.

கி.மு. 1047

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 சாமுவேல் 5:11–25

11 தீருவின் ராஜாவான ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள். 12 யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகப் பெலப்படுத்தி, தம்முடைய மக்களான இஸ்ரவேலுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது தெளிவாக அறிந்தபோது.

13 அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் பெண்களையும் திருமணம் செய்துகொண்டான்; இன்னும் அதிக மகன்களும், மகள்களும் தாவீதுக்குப் பிறந்தார்கள். 14 எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 15 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற பெயர்களை உடைய மகன்கள் பிறந்தார்கள்.

17 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லோரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு கோட்டைக்குள் போனான். 18 பெலிஸ்தர்களோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். 19 பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடம் விசாரித்தபோது, யெகோவா: போ, பெலிஸ்தர்களை உன்னுடைய கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார். 20 தாவீது பாகால்பிராசீமிற்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதுபோல, யெகோவ என்னுடைய எதிரிகளை எனக்கு முன்பாக சிதறடித்தார் என்று சொல்லி, அதினால் அந்த இடத்திற்குப் பாகால்பிராசீம் என்று பெயரிட்டான். 21 அங்கே பெலிஸ்தர்கள் தங்களுடைய விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவனுடைய மனிதர்களும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

22 பெலிஸ்தர்கள் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். 23 தாவீது யெகோவாவிடம் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராகப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, 24 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற சத்தத்தை நீ கேட்கும்போது, சீக்கிரமாக எழுந்துப்போ; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, யெகோவா உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார். 25 யெகோவா தாவீதுக்குக் கட்டளையிட்டபடி அவன் செய்து, பெலிஸ்தர்களைக் கேபா துவங்கிக் கேசேர் எல்லைவரை முறியடித்தான்.

1 நாளாகமம் 14:17

17 அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.

1 நாளாகமம் 14:1–16

1 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான். 2 யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

3 எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான். 4 எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 5 இப்பார், எலிசூவா, எல்பெலேத், 6 நோகா, நெப்பேக், யப்பியா, 7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

8 தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான். 9 பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். 10 பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, யெகோவா: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 11 அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள். 12 அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன. 13 பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். 14 அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, 15 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார். 16 தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.