இஸ்ரவேல் முழுவதற்கும் தாவீது அரசனாக்கப்படுதல்
கி.மு. 1048
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அந்தக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனில் இருக்கிற தாவீதிடம் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சதையுமானவர்கள். 2 சவுல் எங்கள்மேல் ராஜாவாக இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; யெகோவா: என்னுடைய மக்களான இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாக இருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள். 3 இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கைசெய்தபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
1 தாவீது ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களோடும் நூறுபேர்களுக்குத் தலைவர்களோடும் எல்லா அதிபதிகளோடும் ஆலோசனைசெய்து, 2 இஸ்ரவேல் சபைகளையெல்லாம் நோக்கி: உங்களுக்கு விருப்பமாகவும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு சித்தமாகவும் இருந்தால், இஸ்ரவேலின் தேசங்களில் எல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களும், அவர்களோடு தங்களுடைய ஊரில் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் நம்மோடு சேரும்படி நாம் சீக்கிரமாக அவர்களிடம் ஆள் அனுப்பி, 3 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்திற்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாமற்போனோம் என்றான். 4 இந்தக் காரியம் எல்லா மக்களின் பார்வைக்கும் சரியாக இருந்ததால், சபையார்கள் எல்லோரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.
1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து,
அறிந்திருக்கிறீர்.
2 என்னுடைய உட்காருதலையும்
என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்;
என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
4 என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே,
இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
5 முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி,
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.
7 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?
உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
9 நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து,
கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்தும்,
உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
11 இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
12 உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது;
இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்;
உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.
13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்;
என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். 14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;
உமது செயல்கள் அதிசயமானவைகள்;
அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.
15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,
பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது,
என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.
16 என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது;
என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்,
அவைகள் உருவேற்படும் நாட்களும்,
உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.
17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்;
அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.
18 அவைகளை நான் எண்ணப்போனால்,
மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.
19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்;
இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.
20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்;
உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள்.
21 யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும்,
உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை
அருவருக்காமலும் இருப்பேனோ?
22 முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்;
அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன்.
23 தேவனே, என்னை ஆராய்ந்து,
என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,
நித்திய வழியிலே என்னை நடத்தும்.
23 யெகோவாவுடைய வார்த்தையின்படியே, சவுலின் ராஜ்ஜியபாரத்தைத் தாவீதிடம் திருப்ப, எப்ரோனில் இருக்கிற அவனிடம் வந்த போர்வீரர்களான தலைவர்களின் எண்ணிக்கை: 24 யூதா கோத்திரத்தில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, யுத்த போர்வீரர்களானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர். 25 சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர். 26 லேவி கோத்திரத்தில் நான்காயிரத்து அறுநூறுபேர். 27 ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும், 28 பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே. 29 பென்யமீன் கோத்திரத்தார்களான சவுலின் சகோதரர்களில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள். 30 எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர். 31 மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்க வரும்படி, பெயர்பெயராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெட்டாயிரம்பேர். 32 இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே. 33 செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர். 34 நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர். 35 தாண் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எட்டாயிரத்து அறுநூறுபேர். 36 ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர். 37 யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர். 38 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, இந்த யுத்தமனிதர்கள் எல்லோரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இதயத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற அனைவரும் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள். 39 அவர்கள் அங்கே தாவீதோடு மூன்று நாட்கள் இருந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம்செய்திருந்தார்கள். 40 இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைவரை அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும், கழுதைகள்மேலும், ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும், மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சைப்பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளைத் தேவையான அளவு ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டானது.
8 தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன். 9 இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான். 10 இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள். 11 இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது, 12 இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
20 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேர்களில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை கொன்றதால் இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான். 21 இந்த மூன்றுபேர்களில் அவன் மற்ற இரண்டுபேர்களிலும் மேன்மையுள்ளவனானதால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கு அவன் சமமானவன் இல்லை. 22 பெலசாலியாகிய யோய்தாவின் மகனும், கப்சேயேல் ஊரைச்சேர்ந்தவனுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமட்டுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு குகைக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான். 23 ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியனுடைய கையில் நெய்கிறவர்களின் படைமரத்திற்கு இணையான ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவனுடைய ஈட்டியால் அவனைக் கொன்றுபோட்டான். 24 இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான். 25 முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
26 இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், 27 ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ், 28 தெக்கோவியனாகிய இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர், 29 ஊசாத்தியனாகிய சிப்பெக்காய், அகோகியனாகிய ஈலாய், 30 நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத், 31 பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா, 32 காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல், 33 பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா, 34 கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனாகிய சாகியின் மகன் யோனத்தான். 35 ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால், 36 மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா, 37 கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி, 38 நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார், 39 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராய், 40 இத்ரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரேப், 41 ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத், 42 ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள். 43 மாகாவின் மகன் ஆனான், மிதினியனாகிய யோசபாத், 44 அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓதாமின் மகன்கள் சமாவும், யேகியேலும், 45 சிம்ரியின் மகன் யெதியாயேல், தித்சியனாகிய அவனுடைய சகோதரன் யோகா, 46 மாகாவியர்களான ஏலியேல், ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும், 47 மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
4 தாவீது ராஜாவாகும்போது, 30 வயதாக இருந்தான்; அவன் 40 வருடங்கள் ஆட்சி செய்தான். 5 அவன் எப்ரோனிலே யூதாவை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும், எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதும் யூதாவையும் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான்.
6 தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்கள்மேல் யுத்தம்செய்ய ராஜா தன்னுடைய மனிதர்களோடு எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே தாவீதால் நுழையமுடியாது என்று நினைத்து, தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழையமுடியாது; குருடர்களும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். 7 ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது. 8 எவன் கழிவுநீர்க்கால்வாய் வழியாக ஏறி, எபூசியர்களையும் தாவீதின் எதிரிகளான சப்பாணிகளையும், குருடர்களையும் முறியடிக்கிறானோ, அவன் தலைவனாக இருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும்; யெகோவாவின் வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்வதுண்டு. 9 அந்தக் கோட்டையிலே தாவீது வாழ்ந்து, அதற்குத் தாவீதின் நகரம் என்று பெயரிட்டு, மில்லோ என்னும் இடம் துவங்கி, உட்புறம்வரை சுற்றிலும் மதிலைக் கட்டினான். 10 தாவீது நாளுக்குநாள் அதிக பெலமடைந்தான்; ஏனென்றால், சேனைகளின் தேவனாகிய யெகோவா அவனோடு இருந்தார்.
1 இஸ்ரவேலர்கள் எல்லோரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சரீரமுமானவர்கள். 2 சவுல் இன்னும் ராஜாவாக இருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டு வருவீர்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, அவர்கள்மேல் தலைவனாக இருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள். 3 அப்படியே இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டபின்பு, யெகோவா சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
4 பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள். 5 அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழைவதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது. 6 எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான். 7 தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது. 8 பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான். 9 தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது; ஏனென்றால், சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார்.
10 யெகோவா இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்க அவனோடு இருந்து ராஜ்ஜியபாரம்செய்கிற அவனிடமும், எல்லா இஸ்ரவேலர்களிடமும், வீரர்களாக இருந்த முதன்மையான பெலசாலிகளும், 11 தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான். 12 இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன். 13 பெலிஸ்தர்கள் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடு அங்கே இருந்தான். 14 அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தர்களை வெட்டிப்போட்டார்கள்; அதினாலே யெகோவா பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.
18 யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான். 19 இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல. 20 பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான். 21 அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான். 22 இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான். 23 30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
24 யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், 25 ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா, 26 பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன். 27 ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி, 28 அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி, 29 பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, 30 பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி, 31 அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத், 32 சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன். 33 ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன், 34 மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன். 35 கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி, 36 சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி, 37 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய், 38 இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப், 39 ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர்.