எசேக்கியாவின் நோய் (continued)

எசேக்கியாவின் நோய்: அறிமுகம்.

கி.மு. 713

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏசாயா 34–35

1 தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக. 2 சகல தேசங்களின்மேலும் யெகோவாவுடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களை அழிவிற்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். 3 அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்பட்டுக்கிடப்பார்கள்; அவர்களுடைய சடலங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும். 4 வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புத்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சைச்செடியின் இலைகள் உதிர்வதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிர்வதுபோலவும் உதிர்ந்து விழும். 5 வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் அழிவிற்கு நியமித்த மக்களின்மேலும், அது நியாயம்செய்ய இறங்கும். 6 போஸ்றா பட்டணத்திலே யெகோவாவுக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகா அழிவும் உண்டு; யெகோவாவுடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, கொழுப்பினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய சிறுநீரகங்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும். 7 அவைகளுடன் காண்டாமிருகங்களும், காளைகளின் கூட்டமும்வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்களுடைய மண், மிருகங்களுடைய கொழுப்பினால் கொழுத்துப்போகும். 8 அது யெகோவா பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருடம். 9 அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும். 10 இரவும் பகலும் அது அணையாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை. 11 நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் அளவுநூலையும், வெறுமையின் தூக்குநூலையும் பிடிப்பார். 12 அரசாட்சிசெய்ய அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள். 13 அதின் அரண்மனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் முட்புதர்களும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் குடியிருப்பும், ஆந்தைகளின் மாளிகையுமாயிருக்கும். 14 அங்கே காட்டுமிருகங்களும் நரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே ஆந்தைகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும். 15 அங்கே இராஜாளிக்கழுகு கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே பருந்துகளும் ஜோடிஜோடியாகச் சேரும். 16 யெகோவாவுடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் இணை இல்லாமல் இருக்காது; அவருடைய வாய் இதைச் சொன்னது; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். 17 அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக அதிலே வசிக்கும்.

35:1 வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும். 2 அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். 3 தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள். 5 அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும். 6 அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும். 7 வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும். 8 அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 9 அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 10 யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

ஏசாயா 38:9–20

9 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது: 10 நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். 11 யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை. 12 என் ஆயுள் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர். 13 விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி, 14 நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; யெகோவாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன். 15 நான் என்ன சொல்வேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுளின் வருடங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன். 16 ஆண்டவரே, இவைகளினால் மனிதர்கள் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னை சுகமடையவும் பிழைக்கவும்செய்தீர். 17 இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர். 18 பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. 19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான். 20 யெகோவா என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.