பாபிலோனின் ராஜா எசேக்கியாவை வாழ்த்துகிறார்
எசேக்கியா குணமடைந்ததற்காகப் பாபிலோனின் ராஜா அவரை வாழ்த்துகிறார்.
கி.மு. 713
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
12 அக்காலத்திலே பலாதானின் மகனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். 13 எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை. 14 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். 15 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான். 16 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும். 17 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 18 நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான். 19 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
சனகெரிப்பின் இரண்டாம் படையெடுப்பு சுருக்கமாக கி.மு. 710
சனகெரிப்பின் இரண்டாம் படையெடுப்புக்கு ஓர் அறிமுகம், அல்லது அதைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரிப்பு.
9 இதன்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழு படையுடன் லாகீசுக்கு எதிராக முற்றுகை போட்டிருக்கும்போது, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்திற்கும், எருசலேமிலுள்ள யூதா மக்கள் அனைவரிடத்திற்கும் தன் வேலைக்காரர்களை அனுப்பி: 10 அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றுகை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருப்பதற்கு, நீங்கள் எதன்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்? 11 நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தாலும் சாகும்படி உங்களுக்குப் போதிக்கிறான் அல்லவா? 12 அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியர்களுக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா? 13 நானும் என் முன்னோர்களும் தேசத்து சகல மக்களுக்கும் செய்ததை அறியவில்லையா? அந்த தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ? 14 என் முன்னோர்கள் பாழாக்கின அந்த மக்களுடைய அனைத்து தெய்வங்களிலும் எவன் தன் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? அப்படியிருக்க, உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கமுடியுமா? 15 இப்போதும் எசேக்கியா உங்களை ஏமாற்றவும், இப்படி உங்களுக்கு போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த மக்களின் தெய்வமும், எந்த ராஜ்யத்தின் தெய்வமும் தன் மக்களை என் கைக்கும் என் முன்னோர்களின் கைக்கும் தப்புவிக்க முடியாமல் இருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி, 16 அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள். 17 தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் தங்கள் மக்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் மக்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை அவமதிக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் கடிதங்களையும் எழுதினான். 18 அவர்கள் மதிலின்மேலிருக்கிற எருசலேமின் மக்களைப் பயப்படுத்தி, கலங்கச்செய்து, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூத மொழியிலே மகா சத்தமாகக் கூப்பிட்டு, 19 மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள். 20 இதனால் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தனை செய்து, வானத்தை நோக்கி முறையிட்டார்கள். 21 அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள். 22 இப்படிக் யெகோவா எசேக்கியாவையும் எருசலேமின் குடிமக்களையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லோருடைய கைக்கும் விலக்கிக் காப்பாற்றி, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார். 23 அநேகம்பேர் யெகோவாக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு விலையுயர்ந்த பொருட்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிறகு சகல மக்களின் பார்வைக்கும் மதிக்கப்பட்டவனாயிருந்தான்.