தாவீது அதுல்லாம் குகைக்குத் தப்பியோடுதல்
கி.மு. 1060
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்திற்குப் போனார்கள்.
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம்.
1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
2 அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்;
அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
3 என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,
நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்;
நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
4 வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,
என்னை அறிவார் ஒருவரும் இல்லை;
எனக்கு அடைக்கலமில்லாமற் போனது;
என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
5 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
நீரே என் அடைக்கலமும்,
உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.
6 என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும்,
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;
என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும்,
அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.
7 உமது பெயரை நான் துதிக்கும்படி,
என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்;
எனக்கு நீர் தயவு செய்யும்போது
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
2 ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடு கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் படியாக ஏறக்குறைய 400 பேர் அவனோடு இருந்தார்கள்.
8 காத்தியர்களில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளில் இருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமும் உள்ளவர்களாக இருந்து, யுத்தவீரர்களான பலசாலிகள் சிலரும் வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதுக்கு ஆதரவாக சேர்ந்தார்கள். 9 யாரென்றால், ஏசேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப், 10 நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா, 11 ஆறாவது அத்தாயி, ஏழாவது ஏலியேல், 12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத், 13 பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி, 14 காத் மகன்களான இவர்கள் இராணுவத்தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேர்களுக்கும் பெரியவன் ஆயிரம்பேர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள். 15 யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற அனைவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே. 16 பின்னும் பென்யமீன் மனிதர்களிலும் யூதா மனிதர்களிலும் சிலர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதிடம் வந்தார்கள். 17 தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களை சந்தித்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாக என்னிடம் வந்தீர்களானால், என்னுடைய இருதயம் உங்களோடு இணைந்திருக்கும்; என்னுடைய கைகளில் கொடுமை இல்லாமலிருக்க, என்னை என்னுடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களென்றால், நம்முடைய முற்பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான். 18 அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கியதால், அவன்: “தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் மகனே, உமக்கு ஆதரவாக இருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார்” என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை படைகளுக்குத் தலைவர்களாக்கினான்.
13 முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது, 14 தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது. 15 தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். 16 அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு: 17 யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
15 முப்பது தலைவர்களில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் குகையில் இருக்கிற தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் முகாம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது, 16 தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் படை பெத்லெகேமில் இருந்தது. 17 தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆசைகொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். 18 அப்பொழுது அந்த மூன்றுபேர்களும் பெலிஸ்தர்களின் முகாமிற்குள் துணிவுடன் நுழைந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனமில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: 19 நான் இதைச் செய்யாதபடி, என்னுடைய தேவன் என்னைக் காத்துக்கொள்வாராக; தங்களுடைய உயிரைப்பற்றி நினைக்காமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனிதர்களின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.