தாவீது நோப்பிலுள்ள அகிமெலேக்கிடம் தப்பியோடுதல்
கி.மு. 1060
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடம் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடு வராமல், நீர் தனித்து வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான். 2 தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று வாலிபர்களுக்கு சொல்லியிருக்கிறேன். 3 இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பங்களோ, எதாவது, இருக்கிறதை என்னுடைய கையிலே கொடும் என்றான். 4 ஆசாரியன் தாவீதுக்குப் பதிலாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே தவிர, சாதாரண அப்பம் என்னுடைய கையில் இல்லை; வாலிபர் பெண்களோடு மட்டும் சேராமலிருந்தால் கொடுப்பேன் என்றான். 5 தாவீது ஆசாரியனுக்குப் பதிலாக: நான் புறப்படுகிறதற்கு முன்பு நேற்றும் முந்தையநாளும் பெண்கள் எங்களுக்கு விலகியிருந்தார்கள்; வாலிபர்களுடைய சரீரங்களும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைசெய்யப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான். 6 அப்பொழுது யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமூகத்தின் அப்பங்களைத்தவிர, வேறு அப்பம் அங்கே இல்லாததால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தை கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும். 7 சவுலுடைய வேலைக்காரர்களில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான். 8 தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியோ, பட்டயமோ இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியால், என் பட்டயத்தையோ, என் ஆயுதங்களையோ, நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான். 9 அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்திற்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான்.
தாவீது காத்தின் அரசனான ஆகீசிடம் தப்பியோடுதல்
10 அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். 11 ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ?
“சவுல் கொன்றது 1,000,
தாவீது கொன்றது 10,000” என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.
12 இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, 13 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் செய்கையை வேறுபடுத்தி, அவர்களிடம் பைத்தியக்காரனைப் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழசெய்துக்கொண்டிருந்தான். 14 அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன? 15 எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
1 தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான்,
நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
2 என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்;
உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன்,
நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
5 எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;
எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
6 அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்;
என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
7 அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ?
தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.
8 என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்;
என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்;
அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்;
தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்;
யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
12 தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது;
உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.
13 நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி,
நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?
தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல்.
1 யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்;
அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும்.
2 யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்;
ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
3 என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;
நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
4 நான் யெகோவாவை தேடினேன்,
அவர் எனக்குச் செவிகொடுத்து,
என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;
அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
6 இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு,
அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார்.
7 யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி
முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;
அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
9 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்;
அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்;
யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.
11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்;
யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
12 நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி,
நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்?
13 உன் நாவை தீங்கிற்கும்,
உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
14 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள்.
15 யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது;
அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
16 தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய,
யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.
17 நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு,
அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
18 உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து,
நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார்.
19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும்,
யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார்.
20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்;
அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்;
நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
22 யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்;
அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.