தாவீது மக்களைக் கணக்கெடுத்தல்
கி.மு. 1017
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவாவுடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் வந்தது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை எண்ணிக்கை பார் என்று அவர்களுக்கு எதிராகச் சொல்லுகிறதற்கு தாவீது தூண்டப்பட்டான். 2 அப்படியே ராஜா தன்னோடு இருக்கிற தளபதியான யோவாபைப் பார்த்து: மக்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி நீ தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேலர்களின் கோத்திரங்கள் எங்கும் சுற்றித்திரிந்து மக்களைக் கணக்கெடுங்கள் என்றான். 3 அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனான யெகோவா மக்களை இப்பொழுது இருக்கிறதைவிட, நூறுமடங்கு அதிகமாகப் பெருகச்செய்வாராக; ஆனாலும் என் ஆண்டவனான ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான். 4 ஆனாலும் யோவாபும் இராணுவத்தலைவர்களும் சொன்ன வார்த்தை செல்லாமற்போகும்படி, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் மக்களைக் கணக்கெடுக்க, யோவாபும் இராணுவத்தலைவர்களும் ராஜாவைவிட்டுப் புறப்பட்டுப்போய், 5 யோர்தான் நதியைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் முகாமிட்டு, 6 அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய், 7 பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர்கள், கானானியர்களுடைய எல்லா பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய், 8 இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதங்களும் இருபது நாட்களும் ஆனபிறகு எருசலேமிற்கு வந்தார்கள். 9 யோவாப் மக்களைக் கணக்கெடுத்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்தவீரர்கள் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதா மனிதர்கள் 5,00,000 பேர் இருந்தார்கள்.
6 ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான். 7 இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார்.
23 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை. 24 செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை.
10 இவ்விதமாக மக்களை எண்ணிப்பார்த்த பின்பு, ராஜாவின் இருதயம் அவனை நோகடித்தது; அப்பொழுது தாவீது யெகோவாவை நோக்கி: நான் இப்படிச் செய்ததால் பெரிய பாவம் செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் பெரிய முட்டாள்தனமான காரியம் செய்தேன் என்றான். 11 தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனான காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது: 12 நீ தாவீதிடம் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார். 13 அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதங்கள் உம்முடைய எதிரிகள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான். 14 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் யெகோவாவுடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.
15 அப்பொழுது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் 70,000 பேர் இறந்துபோனார்கள்.
15 எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது யெகோவா பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; யெகோவாவுடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான். 16 தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற யெகோவாவுடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
17 மக்களை வேதனைப்படுத்துகிற தூதனை தாவீது கண்டபோது, அவன் யெகோவாவை நோக்கி: இதோ, நான்தான் பாவம் செய்தேன்; நான்தான் அக்கிரமம் செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக என்று விண்ணப்பம்செய்தான்.
17 தாவீது தேவனை நோக்கி: மக்களை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவம் செய்தேன்; தீங்கு நடக்கச்செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தண்டிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய மக்களுக்கு விரோதமாக இராமல், எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்றான். 18 அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று யெகோவாவுடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான். 19 அப்படியே தாவீது யெகோவாவின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படி போனான். 20 ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான். 21 தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான். 22 அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான். 23 ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், உணவுபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான். 24 அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, யெகோவாவுக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, 25 தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, 26 அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்திரவு கொடுத்ததுமல்லாமல், 27 தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்.
28 எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே யெகோவா தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான். 29 மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின யெகோவா தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது. 30 தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.
ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.
1 யெகோவாவே,
என்னுடைய எதிரிகள்
என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல்,
நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால்,
நான் உம்மைப் போற்றுவேன்.
2 என் தேவனாகிய யெகோவாவே,
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,
என்னை நீர் குணமாக்கினீர்.
3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து,
நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.
4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,
அவரைப் புகழ்ந்துபாடி,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;
மாலையில் அழுகை வரும்,
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
6 நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று,
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
7 யெகோவாவே, உம்முடைய தயவினால்
நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்;
உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
8 நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு?
புழுதி உம்மைத் துதிக்குமோ?
அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9 யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து
என்மேல் இரக்கமாக இரும்;
யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
10 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.
11 என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்;
என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல்
உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக
நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.
12 என் தேவனாகிய யெகோவாவே,
உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.