தாவீது மக்களைக் கணக்கெடுத்தல் (continued)
கி.மு. 1017
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது. 2 அப்படியே தாவீது யோவாபையும், படைத்தளபதிகளையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதுவங்கி தாண்வரை இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். 3 அப்பொழுது யோவாப்: யெகோவாவுடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான். 4 யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து, 5 போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.
8 தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; பெரிய முட்டாள்தனமாக செய்தேன் என்றான். 9 அப்பொழுது யெகோவா, தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி, 10 நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். 11 அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: 12 மூன்று வருடத்துப் பஞ்சமோ? அல்லது உன்னுடைய எதிரியின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்னுடைய எதிரிகளுக்கு முன்பாக ஓடிப்போகச் செய்யும் மூன்றுமாதத் துரத்துதலோ? அல்லது மூன்றுநாட்கள் யெகோவாவுடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் அழிவு உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் யெகோவாவுடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று யெகோவா சொல்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான். 13 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் யெகோவாவுடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான். 14 ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள்.
16 தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்னுடைய கையை அதின்மேல் நீட்டினபோது, யெகோவா அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, மக்களை அழிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன்னுடைய கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் யெகோவாவுடைய தூதன் எபூசியனான அர்வனாவினுடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான்.
18 அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான். 19 காத்துடைய வார்த்தையின்படியே தாவீது யெகோவா கற்பித்தபடி போனான். 20 அர்வனா பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர்களும் தன்னிடம் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைவரைக்கும் குனிந்து ராஜாவை வணங்கி, 21 ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை மக்களைவிட்டு நிறுத்தக் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி இந்தக் களத்தை உன்னுடைய கையிலே வாங்க வந்தேன் என்றான். 22 அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகங்களும் இங்கே இருக்கிறது என்று சொல்லி, 23 அர்வனா அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனான யெகோவா உம்மிடம் கிருபையாக இருப்பாராக என்றான். 24 ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாக வாங்கி, என்னுடைய தேவனான யெகோவாவுக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன்னுடைய கையிலே விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்கு வாங்கிக்கொண்டான். 25 அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது யெகோவா தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
தாவீதின் ஆட்சியின் கடைசி ஆறு மாதங்கள் கி.மு. 1015
ஆலயத்தைக் கட்ட தாவீது ஆயத்தமாகிறார்
1 அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான்.
2 பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான். 3 தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும், 4 எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். 5 தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; யெகோவாவுக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான். 6 அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 7 சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன். 8 ஆனாலும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய். 9 இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன். 10 அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். 11 இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, யெகோவா உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக. 12 யெகோவா உனக்கு ஞானத்தையும் உணர்வையும் கொடுத்து, உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. 13 யெகோவா இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த கட்டளைகளையும் சட்டங்களையும் செய்ய நீ கவனமாக இருந்தால் பாக்கியவானாக இருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாக இரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு. 14 இதோ, நான் என்னுடைய சிறுமையிலே யெகோவாவுடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய். 15 வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள். 16 பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; யெகோவா உன்னோடு இருப்பாராக என்றான். 17 தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது: 18 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களோடு இருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; யெகோவாவுக்கு முன்பாகவும், அவருடைய மக்களுக்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. 19 இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவதற்கு நேராக்கி, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், யெகோவாவுடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.