மிஸ்பேயில் தாவீது (continued)

கி.மு. 1060

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 109

இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

1 நான் துதிக்கும் தேவனே,

மவுனமாக இருக்கவேண்டாம்.

2 துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும்,

எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது;

பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.

3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு,

காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.

4 என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள்,

நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.

5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள்,

என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

6 அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும்,

சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.

7 அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்;

அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.

8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்;

அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.

9 அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும்,

அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.

10 அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து,

தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.

11 கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்;

அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.

12 அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும்,

அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.

13 அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்;

இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.

14 அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும்,

அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.

15 அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்;

அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.

16 அவன் தயவுசெய்ய நினைக்காமல்,

ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி,

மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்;

அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான்,

அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.

18 சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்;

அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும்,

அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

19 அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும்,

எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.

20 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும்,

என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.

21 ஆண்டவராகிய யெகோவாவே,

நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து,

உமது கிருபை நலமானதினால்,

என்னை விடுவித்தருளும்.

22 நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்,

என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.

23 சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்;

வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

24 உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது;

என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.

25 நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து,

தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.

26 என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்;

உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.

27 இது உமது கரம் என்றும், யெகோவாவே,

தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.

28 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்;

அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்;

உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.

29 என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு,

தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.

30 யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து,

அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

31 தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி

அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.

சங்கீதங்கள் 17

தாவீதின் ஜெபம்.

1 யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும்,

என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்;

பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும்

என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

2 உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக;

உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக.

3 நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து,

இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும்

ஒன்றும் காணாமலிருக்கிறீர்; என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன்.

4 மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே

தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.

5 என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன.

என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை.

6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன்,

ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து,

என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.

7 உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து

உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே!

உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.

8 கண்மணியைப்போல் என்னைக் காத்து.

9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும்,

என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக,

உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

10 அவர்கள் கொழுத்துப்போய்,

தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள்.

11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்;

எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும்,

மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள்.

13 யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால்

என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.

14 யெகோவாவே, மனிதருடைய கைக்கும்,

இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும்

உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்;

அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்;

அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து,

தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.

15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்;

நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.