கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சிகள்
கொரிந்தியர்களிடையே பரவியிருந்த உயிர்த்தெழுதலைப் பற்றிய ஒரு யூதத் தவறான கருத்தைப் பவுல் தொடர்ந்து மறுக்கிறார். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கான சிறந்த ஆதாரமாக நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியத்தை முன்வைக்கிறார்.
கி.பி. 57
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். 2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே. 3 நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4 அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, 5 கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார். 6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள். 7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார். 8 எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். 9 நான் அப்போஸ்தலர்கள் எல்லோரையும்விட குறைந்தவனாக இருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் தகுதியற்றவன். 10 ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது. 11 ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள்.
இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்பதைக் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நிரூபிக்கிறது
இறந்தவர்கள் நிச்சயமாக உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதைக் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலிலிருந்து பவுல் நிரூபிக்கிறார். மனிதகுலம் ஆதாமின் மூலம் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டது; கிறிஸ்துவின் மூலம் உயிரோடு எழுப்பப்படுகிறது.
12 கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? 13 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே. 14 கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண். 15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. 16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை. 17 கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள். 18 கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே. 19 இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம். 20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். 21 மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. 22 ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
உயிர்த்தெழுதலின் வரிசை
உயிர்த்தெழுதலின் வரிசையைப் பவுல் வெளிப்படுத்துகிறார். மனிதகுலம் கல்லறையிலிருந்து எழுப்பப்பட்டு, பாவமும் மரணமும் அழிக்கப்பட்ட பிறகு, மத்தியஸ்தராகத் தமக்குள்ள ராஜ்யத்தைக் கிறிஸ்து ஒப்படைக்கிறார்.
23 அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 25 எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும். 26 அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம். 27 எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது. 28 அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
உயிர்த்தெழுதலை மறுப்பது ஞானஸ்நானத்திற்கு முரணானது
உயிர்த்தெழுதலை நம்பாதது ஞானஸ்நானத்தில் நாம் அறிக்கையிடுவதற்கு முரணாக இருப்பதோடு, ஒழுக்கக்கேடான வாழ்க்கையையும் ஊக்குவிக்கிறது. ஏமாற வேண்டாம் என்று அவர் அவர்களை வலியுறுத்துகிறார்.
29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? 30 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாக இருக்கிறோம்? 31 நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன். 32 நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர்கள் வழக்கமாகச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? 33 மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 34 நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
விதையைப்போலச் சரீரம் மாற்றமடைந்து உயிர்த்தெழும்
இறந்தவர்களின் உயிர்த்தெழுதலை, விதையிலிருந்து செடி வளர்வதுடன் ஒப்பிட்டு, அதற்கு எதிரான தத்துவ ஆட்சேபனைகளுக்குப் பவுல் பதிலளிக்கிறார். மண்ணில் புதைக்கப்படும் மனித சரீரமும் அவ்வாறே உயிர்த்தெழுதலின்போது, அதன் பண்புகள் மாற்றமடைந்து, உருவத்தில் மேலும் அழகுற்று மீண்டும் எழும் என்பதைக் காட்டுகிறார்.
35 ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால், 36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே. 37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். 38 அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். 39 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு. 40 வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு; 41 சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. 42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்; 43 மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும். 44 சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.