சிறையிருப்பு நிச்சயம் என்பதற்கான எச்சரிக்கைகள் (continued)

யூதர்களின் சிறையிருப்பும் எருசலேமின் அழிவும் நிச்சயம் என்று அறிவிக்கும் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் யூதர்களுக்கான வேண்டுகோள்களும்.

கி.மு. 609

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எரேமியா 14–15

1 மழை இல்லாமையைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்: 2 யூதா துக்கப்படுகிறது, அதின் வாசல்கள் பெலனில்லாமல் இருக்கிறது; தரைவரை குனிந்து, கறுகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது. 3 அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீர் கிடைக்காமல் வெறும் பாத்திரங்களோடு திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 4 தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 5 வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல் இல்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும். 6 காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார். 7 யெகோவாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய பெயரால் கிருபைசெய்யும்; எங்கள் முறைகேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தோம். 8 இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் அந்நிய மக்களைப்போலவும், இரவுதங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்? 9 நீர் சோர்ந்துபோன மனிதனைப்போலவும், காப்பாற்ற முடியாத பலசாலியைப்போலவும் இருப்பானேன்? யெகோவாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய பெயர் எங்களுக்குச் சூட்டப்பட்டுமிருக்கிறதே; எங்களைவிட்டுப் போகாதிரும். 10 அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று யெகோவா இந்த மக்களைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், யெகோவா அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார். 11 யெகோவா என்னை நோக்கி: நீ இந்த மக்களுக்கு நன்மையுண்டாக விண்ணப்பம் செய்யவேண்டாம். 12 அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் நான் அவர்களை அழிப்பேன் என்றார். 13 அப்பொழுது நான்: ஆ யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன். 14 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் பெயரைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களுடன் பேசினதுமில்லை; அவர்கள் பொய்யான தரிசனத்தையும், பொய்யான சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் பொய்யையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். 15 ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்தில் பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறப்பார்கள். 16 அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் மக்களும், எருசலேமின் வீதிகளில் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அடக்கம்செய்வாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் மக்களென்கிற மகளாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் பெரிய காயத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். 18 நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால் இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார். 19 யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு இழிவானதோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாமல் எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்திற்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து. 20 யெகோவாவே, எங்கள் தீமையையும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாகப் பாவம் செய்தோம். 21 உம்முடைய பெயருக்காக எங்களை வெறுக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களுடன் உமக்கு இருக்கிற உடன்படிக்கை பொய்யாக்காமல் எங்களை நினைத்தருளும். 22 அன்னிய மக்களுடைய வீணான தெய்வங்களுக்குள் மழையைப் பொழியவைப்பவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டாக்கினீர்.

15:1 யெகோவா என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்திற்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த மக்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு. 2 எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லு. 3 கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 4 எசேக்கியாவின் மகனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையச்செய்வேன். 5 எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதாபப்படுவார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்? 6 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார். 7 தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் மக்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாததினால் நான் அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி அழிப்பேன். 8 கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களுக்குள் இருப்பார்கள்; பட்டப்பகலில் அழிக்கிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரச்செய்வேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழச்செய்வேன். 9 ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் இளைத்துப்போகிறாள்; அவள் தன் உயிரை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கும்போது அவளுடைய சூரியன் மறைந்தது; வெட்கமும் அவமானமும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய எதிரிகளுக்கு முன்பாகப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 10 என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதிற்கும் உள்ளானவனாயிருக்க என்னை நீ பெற்றாயே; ஐயோ, நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லோரும் என்னைச் சபிக்கிறார்கள். 11 உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் பகைவனுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன். 12 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ? 13 உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன். 14 நீ அறியாத தேசத்தில் உன் எதிரிகள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகச்செய்வேன்; உங்கள்மேல் எரியப்போகிற நெருப்பை என் கோபத்தினால் ஏற்பட்டது என்று யெகோவா சொன்னார். 15 யெகோவாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எனக்காக நீதியைச் செய்யும்; உம்முடைய நீடிய பொறுமையினால் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய காரணமாக நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும். 16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. 17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர். 18 என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ? 19 இதினால் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்ப ஒழுங்குபடுத்துவேன்; என் முகத்திற்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ பயனற்றதிலிருந்து விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று யெகோவா சொல்லுகிறார். 20 உன்னை இந்த மக்களுக்கு முன்பாக பாதுகாப்பான வெண்கல மதிலாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைப் பாதுகாப்பதற்காகவும், உன்னைக் காப்பாற்றுவதற்காகவும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். 21 நான் உன்னைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றி, உன்னைப் பலவான்களின் கைக்கு விலக்கி விடுவிப்பேன் என்கிறார்.