நியாயப்பிரமாணத்திற்குரிய பல்வேறு சடங்குகள் நிறுவப்படுகின்றன

கி.மு. 1490

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எண்ணாகமம் 5–6

1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “குஷ்டரோகிகள் யாவரையும், கசியும் புண்ணுள்ள யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் முகாமிலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிடு. 3 ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்செய்கிற தங்களுடைய முகாம்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடி, நீங்கள் அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிடவேண்டும் என்றார். 4 யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.

5 மேலும் யெகோவா மோசேயை நோக்கி: 6 “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, யெகோவாவுடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், 7 அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடவேண்டும்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினால் அபராதத்தின் முதலோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தவேண்டும். 8 அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், யெகோவாவுக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும். 9 இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப் படைக்கும்படி, ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாக இருக்கும். 10 ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.

11 யெகோவா மோசேயை நோக்கி: 12 “நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, கணவனுக்குத் துரோகம்செய்து, 13 ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும், 14 எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும், 15 அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும். 16 “ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, 17 ஒரு மண்பானையிலே பரிசுத்த தண்ணீர் ஊற்றி, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த தண்ணீரில்போட்டு, 18 பெண்ணைக் யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, அவளுடைய முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவளுடைய உள்ளங்கையிலே வைக்கவேண்டும்; சாபகாரணமான கசப்பான தண்ணீர் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும். 19 பின்பு ஆசாரியன் அவளை ஆணையிட வைத்து: ஒருவனும் உன்னோடு உறவுகொள்ளாமலும், உன்னுடைய கணவனுக்கு கீழ்பட்டிருக்கிற நீ தீட்டுப்படும்படி பிறர்முகம் பார்க்காமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான தண்ணீரின் தோஷத்திற்கு நீங்கலாக இருப்பாய். 20 உன்னுடைய கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன்னுடைய கணவனைத்தவிர அந்நியனோடு உறவுகொண்டு தீட்டுப்பட்டிருப்பாயானால், 21 யெகோவா உன்னுடைய இடுப்பு சூம்பவும், உன்னுடைய வயிறு வீங்கவும்செய்து, உன்னை உன்னுடைய மக்களுக்குள்ளே சாபமும் ஆணையிடும் அடையாளமாகவும் வைப்பாராக. 22 சாபகாரணமான இந்த தண்ணீர் உன்னுடைய வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் செய்யும்படி, உன்னுடைய குடலுக்குள் போகவேண்டும் என்கிற சாபவார்த்தையாலே பெண்ணை ஆணையிடவைத்துச் சொல்வானாக. அதற்கு அந்தப் பெண்: ஆமென், ஆமென், என்று சொல்லவேண்டும். 23 “பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான தண்ணீரால் கழுவிப்போட்டு, 24 சாபகாரணமான அந்தக் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்படிச் செய்வான்; அப்பொழுது சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும். 25 பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த பெண்ணின் கையிலிருந்து வாங்கி, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி, 26 ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு பெண்ணுக்கு அந்த தண்ணீரைக்குடிக்கும்படி கொடுக்கவேண்டும். 27 அந்த தண்ணீரைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன்னுடைய கணவனுக்குத் துரோகம்செய்திருந்தால், சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் நுழைந்து கசப்புண்டானதால், அவளுடைய வயிறு வீங்கி, அவளுடைய இடுப்பு சூம்பும்; இப்படியே அந்தப் பெண் தன்னுடைய மக்களுக்குள்ளே சாபமாக இருப்பாள். 28 அந்தப் பெண் தீட்டுப்படாமல் சுத்தமாக இருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பமடையக்கூடியவளாக இருப்பாள். 29 “ஒரு பெண் தன்னுடைய கணவனைத்தவிர அந்நிய ஆணோடு சேர்ந்து தீட்டுப்பட்டதால் உண்டான எரிச்சலுக்கும், 30 கணவன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன்னுடைய மனைவியின்மேல் அடைந்த பொறாமைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் யெகோவாவுடைய சந்நிதியில் தன்னுடைய மனைவியை நிறுத்தவேண்டும்; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யவேண்டும். 31 கணவன் அக்கிரமத்திற்கு நீங்கலாக இருப்பான்; அப்படிப்பட்டப் பெண்ணோ, தன்னுடைய அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல்” என்றார்.

6:1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: “ஆணோ பெண்ணோ யெகோவாக்கென்று விரதம் செய்து கொண்டவர்களாக இருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை செய்தால், 3 அப்படிப்பட்டவன் திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் விலக்கவேண்டும்; அவன் திராட்சைரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சைரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடிக்காமலும், திராட்சைப்பழங்களையோ திராட்சைவற்றல்களையோ சாப்பிடாமலும், 4 தான் நசரேயனாக இருக்கும் நாளெல்லாம் திராட்சைச்செடி விதைமுதல் தோல்வரை உள்ளவைகளினால் செய்யப்பட்ட எதையும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும். 5 “அவன் நசரேய விரதமிருக்கும் நாட்களெல்லாம் சவரகன் கத்தி அவனுடைய தலையின்மேல் படக்கூடாது; அவன் யெகோவாக்கென்று விரதமிருக்கும் காலம் நிறைவேறும்வரை பரிசுத்தமாக இருந்து, தன்னுடைய தலைமுடியை வளரவிடவேண்டும். 6 அவன் யெகோவாவுக்கென்று விரதமிருக்கும் நாட்களெல்லாம் யாதொரு பிரேதத்தின் அருகில் போகக்கூடாது. 7 அவன் தன்முடைய தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவனுடைய தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன்னுடைய தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலோ சகோதரியினாலோ தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது. 8 அவன் நசரேயனாக இருக்கும் நாட்களெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருப்பான். 9 “அவனருகில் ஒருவன் திடீரென மரணமடைந்ததால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதென்றால், அவன் தன்னுடைய சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன்னுடைய தலைமுடியைச் சிரைத்துக்கொண்டு, 10 எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையோ இரண்டு புறாக்குஞ்சுகளையோ ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். 11 அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவனுடைய தலையை அந்தநாளில் பரிசுத்தப்படுத்தவேண்டும். 12 அவன் திரும்பவும் தன்னுடைய விரதநாட்களைக் யேகோவாக்கென்று காத்து, ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரவேண்டும்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதால் சென்ற நாட்கள் வீணாகும். 13 “நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதமிருக்கும் நாட்கள் நிறைவேறின அன்றைக்கே, அவன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வந்து, 14 சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும், 15 ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் யெகோவாவுக்குத் தன்னுடைய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். 16 அவைகளை ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, 17 ஆட்டுக்கடாவைக் கூடையில் இருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைக்கவேண்டும். 18 அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலைமுடியை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடவேண்டும். 19 நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமுடியைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேகவைக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து, 20 அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்; அது அசைவாட்டப்பட்ட மார்புப்பகுதியோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சைரசம் குடிக்கலாம். 21 “பொருத்தனைசெய்த நசரேயனுக்கும், அவன் தன்னுடைய கைக்கு உதவுகிறதைத்தவிர, தன் நசரேய விரதத்திற்காக யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கையின் பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன்னுடைய பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்றபடி செய்து முடிக்கவேண்டும் என்று சொல் என்றார். 22 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 23 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

24 “யெகோவா உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பார்.

25 “யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து,

உன்மேல் கிருபையாக இருபாராக.

26 “யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார்,

என்பதே. 27 “இந்த விதமாக அவர்கள் என்னுடைய நாமத்தை இஸ்ரவேல் மக்கள்மேல் கூறவேண்டும்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்” என்றார்.