உசியா தொழுநோயால் தாக்கப்படுகிறார்
கி.மு. 787 அல்லது 765
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
16 அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். 17 ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் யெகோவாவின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து, 18 ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, யெகோவாவுக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள். 19 அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது. 20 பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; யெகோவா தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான். 21 ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
ஏசாயா தீர்க்கதரிசியாக நியமிக்கப்படுகிறார் கி.மு. 758
1 ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் ஆட்சியின் காலங்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி.
1 உசியா ராஜா மரணமடைந்த வருடத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய ஆடையின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 2 சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகளிருந்தன; அவனவன் இரண்டு இறக்கைகளால் தன் முகத்தை மூடி, இரண்டு இறக்கைகளால் தன் கால்களை மூடி, இரண்டு இறக்கைகளால் பறந்து; 3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். 4 சொன்னவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைக்கால்கள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 5 அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். 6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, 7 அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். 8 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். 9 அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். 10 இந்த மக்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்களுடைய காதுகளை மந்தப்படுத்தி, அவர்களுடைய கண்களை மூடிப்போடு என்றார். 11 அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி, 12 யெகோவா மனிதர்களைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் மையப்பகுதி முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே என்று சொன்னார். 13 ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரம் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
1 ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி. 2 வரும்நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசத்தார்களும் அதற்கு ஓடிவருவார்கள். 3 திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும். 4 அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை. 5 யாக்கோபின் வம்சத்தாரே, யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
6 யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய மக்களைக் கைவிட்டீர்; அவர்கள் கிழக்குத் நாடுகளின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தர்களைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய மக்கள்மேல் பிரியப்படுகிறார்களே. 7 அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை. 8 அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கிய சிலைகளைப் பணிந்துகொள்கிறார்கள். 9 சிறியவனும், பெரியவனும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீராக. 10 யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். 11 மனிதர்களின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனிதர்களின் வீணான பிடிவாதமும் தணியும்; யெகோவா ஒருவரே நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்திருப்பார். 12 அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய யெகோவாவின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும், 13 லீபனோனிலுள்ள உயரமும் உயர்ந்ததுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும், 14 உன்னதமான எல்லா மலைகளின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும், 15 உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், பாதுகாப்பான எல்லா மதிலின்மேலும், 16 தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், அனைத்துச் சித்திர விநோதங்களின்மேலும் வரும். 17 அப்பொழுது மனிதர்களின் மேட்டிமை தாழ்ந்து, மனிதர்களின் வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். 18 சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம். 19 பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள். 20 பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு, 21 மனிதன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி சிலைகளையும், தன் பொன் சிலைகளையும், மூஞ்சூறு எலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்துவிடுவான். 22 நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.