இரண்டு சீடர்களும் திரும்பிவந்து செய்தி தெரிவிக்கிறார்கள்
இரண்டு சீடர்களின் அறிக்கையும், சீமோன் பேதுருவுக்குக் காட்சியளித்த செய்தியும்.
எருசலேம். ஞாயிற்றுக்கிழமை மாலை
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
லூக்கா 24:33–35
24:33 அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: 34 கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு, 35 வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
தோமா இல்லாதபோது இயேசு சீடர்களுக்குக் காட்சியளிக்கிறார்
இயேசு வியப்படைந்த சீடர்களுக்குக் காட்சியளித்து (தோமா அங்கு இல்லை), அவர்களுக்கு ஒரு பணிக்கட்டளை கொடுக்கிறார். அவர்களால் தோமாவை நம்பவைக்க முடியவில்லை.
எருசலேம். ஞாயிற்றுக்கிழமை மாலை
மாற்கு 16:14
16:14 அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
லூக்கா 24:36–43
24:36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37 அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39 நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40 தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41 ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42 அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43 அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
யோவான் 20:19–25
20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.
21 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, 22 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்; 23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார்.
24 இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை. 25 மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
இயேசு மீண்டும் காட்சியளிக்கிறார், தோமா நம்புகிறார்
அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இயேசு சீடர்களுக்குக் காட்சியளிக்கிறார், தோமா நம்புகிறார்.
எருசலேம்
யோவான் 20:26–31
20:26 மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 27 பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார். 28 தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். 29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். 30 இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார். 31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.