ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுதல்

கி.மு. 536

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எஸ்றா 3:8–13

8 அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள். 9 அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்துவதற்காக யெசுவாவும் அவனுடைய மகன்களும், சகோதரர்களும், கத்மியேலும் அவனுடைய மகன்களும், யூதாவின் மகன்களும், எனாதாதின் மகன்களும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்களும் ஒருமனப்பட்டு நின்றார்கள். 10 சிற்ப ஆசாரிகள் யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, யெகோவாவை துதிப்பதற்கு, ஆடைகளை அணிந்து, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்களையும், தாளங்களைத் தட்டுகிற ஆசாபின் மகனாகிய லேவியர்களையும் நிறுத்தினார்கள். 11 யெகோவா நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கும்போது, மாறிமாறிப் பாடினார்கள்; யெகோவாவை துதிக்கும்போது, மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதினால் மகா கெம்பீரமாக ஆர்ப்பரித்தார்கள். 12 முந்தின ஆலயத்தைப் பார்த்திருந்த முதிர்வயதான ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவர்களிலும் அநேகர் இந்த ஆலயத்திற்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாக ஆர்ப்பரித்தார்கள். 13 மக்கள் மகா கெம்பீரமாக ஆர்ப்பரிக்கிறதினால் அவர்களுடைய சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், மக்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறிய முடியாதிருந்தது.

சங்கீதங்கள் 84

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

1 சேனைகளின் யெகோவாவே,

உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

2 என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது;

என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

3 என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே,

உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும்,

தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

4 உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்;

அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)

5 உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும்,

தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

6 அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்;

மழையும் குளங்களை நிரப்பும்.

7 அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து,

சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;

யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)

9 எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்;

நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும்.

10 ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;

துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட

என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

11 தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;

யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்;

உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

12 சேனைகளின் யெகோவாவே,

உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.

சங்கீதங்கள் 66

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.

1 பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக்

கெம்பீரமாகப் பாடுங்கள்.

2 அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி,

அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.

3 தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்;

உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள்

உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.

4 பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்;

அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)

5 தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்;

அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.

6 கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்;

ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்;

அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.

7 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;

அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது;

துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)

8 மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.

9 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல்,

நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.

10 தேவனே, எங்களைச் சோதித்தீர்;

வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.

11 எங்களை வலையில் அகப்படுத்தி,

எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.

12 மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்;

தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்;

செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.

13 சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;

14 என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து,

என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை

உமக்குச் செலுத்துவேன்.

15 ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்;

காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)

16 தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்;

அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.

17 அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன்,

என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.

18 என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால்,

ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.

19 மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார்,

என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

20 என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும்,

தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும்

இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.