எருசலேமிலுள்ள ஆலயம் எரிக்கப்படுதல் (continued)
கி.மு. 588
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே,
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
2 பூமியின் நியாயாதிபதியே,
நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும்.
3 யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து,
எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி,
கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
5 யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி,
உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
6 விதவையையும் அந்நியனையும் கொன்று,
திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
7 யெகோவா பார்க்கமாட்டார்,
யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
8 மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்;
மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
9 காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ?
கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ?
10 தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ?
மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ?
11 மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.
12 யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும்,
நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து,
13 தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு
போதிக்கிற மனிதன் பாக்கியவான்.
14 யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும்,
தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்;
செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
16 துன்மார்க்கர்களுக்கு விரோதமாக
எனது சார்பாக எழும்புகிறவன் யார்?
அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?
17 யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால்,
என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும்.
18 என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது,
யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
19 என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது,
உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?
21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி,
குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
22 யெகோவாவோ எனக்கு அடைக்கலமும்,
என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார்.
23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி,
அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்;
நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார்.
17 அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவனுடைய சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக ஏற்படுத்தி, அவனுக்கு சிதேக்கியா என்று வேறுபெயரிட்டான்.
18 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோருவருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள். 19 யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 20 எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவிற்கு விரோதமாகக் கலகமும் செய்தான்.
4 அவன் ஆட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லாப் படையும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராக முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினார்கள்.
2 சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் நகரத்து மதில் உடைக்கப்பட்டது.
4 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் எல்லாப் போர் வீர்களும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இரவு நேரத்தில் ராஜாவின் தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான். 5 ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவை நெருங்கி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான். 6 பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவில், சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டவைத்தான்; யூதாவின் பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி, 7 சிதேக்கியாவின் கண்களைக்கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டான். 8 கல்தேயர், ராஜாவின் அரண்மனையையும் மக்களின் வீடுகளையும் நெருப்பால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். 9 நகரத்தில் தங்கியிருந்த மக்களையும், தன்னிடத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற மக்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.
3 அதே வருடத்தில் நான்காம் மாதம் ஒன்பதாம்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு உணவு இல்லாமல்போனது; நகரத்தின் மதிலில் உடைப்பு ஏற்பட்டது. 4 அப்பொழுது கல்தேயர்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாக இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவும் சமபூமியை நோக்கி ஓடிப்போனார்கள். 5 கல்தேயரின் போர்வீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய படைகளெல்லாம் அவனைவிட்டுச் சிதறிப்போனது. 6 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து, 7 சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 8 ஐந்தாம் மாதம் ஏழாம் தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருட ஆட்சியிலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எருசலேமுக்கு வந்து, 9 யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமின் சகல கட்டிடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான். 10 மெய்க்காப்பாளர்களின் தலைவனோடிருந்த கல்தேயரின் போர்வீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள். 11 நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்கள்கூட்டத்தையும், மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான். 12 தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சைத்தோட்டக்காரர்களாகவும் பயிரிடுகிறவர்களாகவும் விட்டிருந்தான். 13 யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர்கள் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள். 14 செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள். 15 சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எடுத்துக்கொண்டான். 16 சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்துக்காக உண்டாக்கிய இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்தின் எடைக்கு கணக்கில்லை. 17 ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதுளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போலவே இருந்தது. 18 மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான். 19 நகரத்திலே அவன் போர்வீரர்களின் விசாரிப்புக்காரனாகிய அதிகாரி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் பிடிபட்ட ஐந்துபேரையும், தேசத்தின் மக்களைப் படையில் சேர்க்கிற படைத்தலைவனின் தலைமைச் செயலாளனையும், நகரத்தில் பிடிப்பட்ட பொதுமக்களில் அறுபதுபேரையும் பிடித்தான். 20 அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான். 21 அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதாமக்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.