இஸ்ரவேலின் ராஜ்யம்
இஸ்ரவேல்மீது யோராமின் ஆட்சி தொடர்கிறது
சமாரியாவின் முற்றுகையும் பஞ்சமும்
சமாரியாவின் முற்றுகையும், பஞ்சமும், திடீர் விடுதலையும்.
கி.மு. 887
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
24 இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான். 25 அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள். 26 இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள். 27 அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி, 28 ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள். 29 அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள். 30 அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள். 31 அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான். 32 எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான். 33 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
7:1 அப்பொழுது எலிசா: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்த நேரத்தில் சமாரியாவின் வாசலிலே எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 2 அப்பொழுது ராஜாவிற்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரி ஒருவன் தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, யெகோவா வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
3 தொழுநோயாளிகளான நான்குபேர் பட்டணத்தின் நுழைவாயிலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து ஏன் சாக வேண்டும்? 4 பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, 5 சீரியருடைய இராணுவத்திற்குப் போக இரவிலே எழுந்திருந்து, சீரியருடைய முகாமிற்கு அருகில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை. 6 ஆண்டவர் சீரியர்களின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கச் செய்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நமக்கு எதிராகப் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் கூலிக்கு அமர்த்தினான் என்று சொல்லி, 7 இரவிலே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், முகாமையும் அவைகள் இருந்த விதமாகவே விட்டுவிட்டு, தங்கள் உயிர் தப்ப ஓடிப்போனார்கள். 8 அந்தத் தொழுநோயாளிகள், முகாமின் அருகில் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் நுழைந்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, 9 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியும்வரை காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். 10 அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியர்களின் முகாமிற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனிதனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும், கழுதைகளும், கூடாரங்களும் இருந்த விதமாகவே இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள். 11 அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு அதை அறிவித்தார்கள். 12 அப்பொழுது இராஜா இரவில் எழுந்து, தன் வேலைக்காரர்களை நோக்கி: சீரியர்கள் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் முகாமை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்றான். 13 அவனுடைய வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்திரவு கொடும்; இதோ, இங்கே இஸ்ரவேலின் சகல மிகுதியிலும், இறந்துபோன இஸ்ரவேலின் அனைத்து கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீதியாக இருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான். 14 அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய்வாருங்கள் என்று சொல்லி, சீரியர்களின் இராணுவத்தைப் பின்தொடர்ந்து போகும்படி அனுப்பினான். 15 அவர்கள் யோர்தான்வரை அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர்கள் அவசரமாக ஓடும்போது, அவர்கள் எறிந்துபோட்ட உடைகளும் பொருட்களும் வழி முழுவதும் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவிற்கு அதை அறிவித்தார்கள். 16 அப்பொழுது மக்கள் புறப்பட்டு, சீரியர்களின் முகாமைக் கொள்ளையிட்டார்கள்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே, எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. 17 ராஜா தனக்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரியை பட்டணத்தின் நுழைவாயிலில் கண்காணிக்கக் கட்டளையிட்டிருந்தான்; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததாலே, ராஜா தேவனுடைய மனிதனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே அவன் இறந்துபோனான். 18 பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியா பட்டணத்தின் நுழைவாயிலில் விற்கும் என்று தேவனுடைய மனிதன் ராஜாவோடே சொன்னபடியே நடந்தது. 19 அதற்கு அந்த அதிகாரி தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, யெகோவா வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே. 20 அப்படியே அவனுக்கு நடந்தது; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததினாலே அவன் இறந்துபோனான்.
8:1 எலிசா தான் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயை நோக்கி: நீ உன் குடும்பத்தாரோடு எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாவது போய் தங்கியிரு; யெகோவா பஞ்சத்தை வரச்செய்வார்; அது ஏழுவருடங்கள் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான். 2 அந்தப் பெண் எழுந்து, தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தையின்படியே செய்து, தன் குடும்பத்தாரோடுகூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், ஏழுவருடங்கள் குடியிருந்தாள். 3 ஏழுவருடங்கள் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தைவிட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடுவதற்காகப் போனாள். 4 அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான். 5 இறந்துபோனவனை உயிரோடு எழுப்பினார் என்பதை அவன் ராஜாவிற்குச் சொல்லுகிறபோது, இதோ, அவன் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவிடம் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த பெண்; எலிசா உயிரோடு எழுப்பின இவளுடைய மகன் இவன்தான் என்றான். 6 ராஜா அந்த பெண்ணைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரமாகச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவளுக்குரிய எல்லாவற்றையும், அவள் தேசத்தைவிட்டுப் போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய் என்றான்.