இரண்டாம் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்
கி.மு. 515
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
14 அப்படியே யூதரின் மூப்பர்கள் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் மகனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளையின்படியும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளையின்படியும் அதைக் கட்டி முடித்தார்கள். 15 ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருடம் ஆதார் என்னும் மாதத்தின் மூன்றாம் தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 16 அப்பொழுது இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையை சந்தோஷமாகக் கொண்டாடினார்கள். 17 தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, 18 மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவுகளின்படியும், லேவியர்களை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
19 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். 20 ஆசாரியர்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டுத் தங்களை சுத்தம் செய்துகொண்டதால், எல்லோரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்காகவும், ஆசாரியர்களான தங்களுடைய சகோதரர்களுக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். 21 அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் மக்களும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தைவிட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைச் சாப்பிட்டு, 22 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; யெகோவா அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்களுடைய கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாக அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்களிடம் சார்ந்திருக்கப்பண்ணினார்.
கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
1 யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும்,
தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது,
அதுவே மகாராஜாவின் நகரம்.
3 அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6 அங்கே நடுக்கங்கொண்டு,
பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
7 கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்;
தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
9 தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே,
உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
10 தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல
உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது;
உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக,
யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
12 சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
13 பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக,
அதின் சுவரை கவனித்து,
அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
14 இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்;
மரணம்வரை நம்மை நடத்துவார்.
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.
1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி,
யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து,
பாட்டு பாடுங்கள்.
3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும்,
நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
4 இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,
யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
5 நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது,
இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
6 அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்;
அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது.
7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்;
இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்;
மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)
8 என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்;
இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.
9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்;
அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.
10 உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே;
உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.
11 என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை;
இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்;
தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.
13 ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து,
இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
14 நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி,
என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
15 அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்;
அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
16 செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்;
கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
யெகோவாவை துதி.
2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;
அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,
தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;
கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;
விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.
நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
10 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;
சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.
அல்லேலூயா.