உடன்படிக்கைப்பெட்டி கொண்டுசெல்லப்படுதல் (continued)

கி.மு. 1045

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 106

1 அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்;

அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

2 யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி,

அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?

3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும்,

எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.

4 யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு,

உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து,

உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,

5 உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து,

உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.

6 எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து,

அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம்.

7 எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும்,

உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய்,

சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள்.

8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி,

தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார்.

9 அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது;

காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார்.

10 பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.

11 அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது;

அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.

12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து,

அவருடைய துதியைப் பாடினார்கள்.

13 ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்;

அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,

14 வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி,

பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்,

அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.

16 முகாமில் அவர்கள் மோசேயின்மேலும்,

யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.

17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி,

அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.

18 அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது;

நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.

19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி,

வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள்.

20 தங்களுடைய மகிமையைப்

புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

21 எகிப்திலே பெரிய செயல்களையும்,

காமின் தேசத்திலே அதிசயங்களையும்,

சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,

22 தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

23 ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்;

அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே,

அவர்களை அவர் அழிக்காதபடி,

அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு,

அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான்.

24 அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல்,

விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள்.

25 யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல்,

தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.

26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும்,

அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,

27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும்,

அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.

28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு,

உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு,

29 தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்;

ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.

30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்;

அதினால் வாதை நிறுத்தப்பட்டது.

31 அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்;

அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.

33 அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே,

தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.

34 யெகோவா தங்களுக்குச் சொன்னபடி,

அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை.

35 அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;

36 அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்;

அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது.

37 அவர்கள் தங்களுடைய மகன்களையும்

தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.

38 அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு,

தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்;

தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.

39 அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி,

தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள்.

40 அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது;

அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

41 அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்;

அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள்.

42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்;

அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.

43 அநேகமுறை அவர்களை விடுவித்தார்;

அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து,

தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.

44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ,

அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து,

45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து,

தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து,

46 அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.

47 எங்கள் தேவனாகிய யெகோவாவே,

நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி,

உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி,

எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.

48 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா

அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.

மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக,

அல்லேலூயா.

2 சாமுவேல் 6:20–23

20 தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள். 21 அதற்கு தாவீது மீகாளைப் பார்த்து: உன்னுடைய தகப்பனைவிட, அவருடைய எல்லா வீட்டார்களையும்விட, என்னை இஸ்ரவேலான யெகோவாவுடைய மக்களின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படித் தெரிந்துகொண்ட யெகோவாவுடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். 22 இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான். 23 அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது.

1 நாளாகமம் 13:5–14

5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து, 6 கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள். 7 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள். 8 தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள். 9 அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான். 10 அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். 11 அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு, 12 அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, 13 பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான். 14 தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.