லேவியர்கள் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்கள்

கி.மு. 1490

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எண்ணாகமம் 8

1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீ ஆரோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார். 3 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான். 4 இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் தங்கத்தால் அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டிருந்தது; மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.

5 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 6 “நீ இஸ்ரவேல் மக்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிக்கவேண்டும். 7 அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் தண்ணீரைத் தெளிக்கவேண்டும்; பின்பு அவர்கள் உடல் முழவதும் சவரம்செய்து, தங்களுடைய ஆடைகளைத் துவைத்து, தங்களைச் சுத்திகரிக்கவேண்டும். 8 அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லியமாவாகிய போஜனபலியையும் கொண்டுவரவேண்டும்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி. 9 லேவியர்களை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பு வரச்செய்து, இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய். 10 நீ லேவியர்களைக் யெகோவாவுடைய சந்நிதியில் வரச்செய்தபோது, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய கைகளை லேவியர்கள்மேல் வைக்கவேண்டும். 11 லேவியர்கள் யெகோவாவுக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் மக்களின் காணிக்கையாகக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாக நிறுத்தவேண்டும். 12 அதன்பின்பு லேவியர்கள் தங்களுடைய கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்; பின்பு நீ லேவியர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, யெகோவாவுக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தி, 13 லேவியர்களை ஆரோனுக்கும் அவனுடைய மகனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் யெகோவாவுக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி, 14 “இப்படி நீ லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள். 15 இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கவேண்டும்; அதன்பின்பு லேவியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்ய நுழையவேண்டும். 16 இஸ்ரவேல் மக்களிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் மக்கள் எல்லாரிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற எல்லா முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன். 17 இஸ்ரவேல் மக்களில் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் கொன்ற நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி, 18 பின்பு லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு, 19 லேவியர்கள் இஸ்ரவேல் மக்களுடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படியும், இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படியும், இஸ்ரவேல் மக்கள் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் மக்களில் வாதை உண்டாகாதபடியும், லேவியர்களை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசாகக் கொடுத்தேன்” என்றார். 20 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையார் யாவரும் யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களுக்குச் செய்தார்கள். 21 லேவியர்கள் சுத்திகரிக்கப்பட்டு, தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். 22 அதற்குப்பின்பு லேவியர்கள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்களுடைய பணிவிடையைச் செய்யும்படி நுழைந்தார்கள்; யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள். 23 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 24 லேவியர்களுக்குரிய கட்டளை என்னவென்றால்: “இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் கூட்டத்திற்கு சேவிக்க வரவேண்டும். 25 ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடை செய்யும் கூட்டத்தைவிட்டு, 26 ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்களுடைய சகோதரர்களோடு ஊழியம் செய்வதைத் தவிர, வேறொரு வேலையும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர்கள் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டமிடவேண்டும்” என்றார்.

வெள்ளி எக்காளங்களின் பயன்பாடு

எண்ணாகமம் 10:1–10

1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “சபையைக் கூடிவரவழைப்பதற்கும் முகாம்களைப் புறப்படச்செய்வதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும். 3 அவைகளை ஊதும்போது, சபையார் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும். 4 ஒன்றைமட்டும் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களாகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரவேண்டும். 5 நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாக முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும். 6 அவைகளை நீங்கள் இரண்டாவது முறை பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்; அவர்களைப் புறப்படச்செய்வதற்கு பெருந்தொனியாக முழக்கவேண்டும். 7 சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதினால் போதும் பெருந்தொனியாக முழக்கவேண்டாம். 8 ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும். 9 உங்களுடைய தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற எதிரிக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போகும்போது, எக்காளங்களைப் பெருந்தொனியாக முழக்கவேண்டும்; அப்பொழுது உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சமூகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள். 10 உங்களுடைய மகிழ்ச்சியின் நாட்களிலும், உங்களுடைய பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது எக்காளங்களை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்களுடைய தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும்; நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா” என்றார்.

மேகம் மக்களை வழிநடத்திய விதம்

எண்ணாகமம் 9:15–23

15 வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது. 16 இப்படி எப்போதும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது. 17 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்வார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் மக்கள் முகாமிடுவார்கள். 18 யெகோவாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் மக்கள் புறப்படுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாட்களெல்லாம் அவர்கள் முகாமில் தங்கியிருப்பார்கள். 19 மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் புறப்படாமல் யெகோவாவின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள். 20 மேகம் சிலநாட்கள் மட்டும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிட்டு, யெகோவாவுடைய கட்டளையின்படியே புறப்படுவார்கள். 21 மேகம் மாலைதுவங்கி அதிகாலைவரை இருந்து, அதிகாலையில் உயர எழும்பும்போது, உடனே புறப்படுவார்கள்; பகலிலோ இரவிலோ மேகம் எழும்பும்போது புறப்படுவார்கள். 22 மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருடமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யாமல் முகாமிட்டிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ புறப்படுவார்கள். 23 யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே யெகோவாவுடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.