பொன் கன்றுக்குட்டி

கி.மு. 1491

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யாத்திராகமம் 32:1–6

1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடம் கூட்டம்கூடி. அவனை நோக்கி: “எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டாக்கும்” என்றார்கள். 2 அதற்கு ஆரோன்: “உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். 3 மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். 4 அவர்களுடைய கையிலிருந்து அவன் அந்தப் தங்கங்களை வாங்கி, சிற்பக்கருவியைக் கூர்மையாக்கி, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே” என்றார்கள். 5 ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்குக் யெகோவாவுக்குப் பண்டிகை” என்று கூறினான். 6 மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, மக்கள் சாப்பிடவும், குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

நியாயப்பிரமாணத்தின் கற்பலகைகள் உடைக்கப்படுகின்றன

யாத்திராகமம் 32:7–33:23

7 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். 8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலர்களே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள்” என்றார். 9 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள மக்கள். 10 ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய தேசமாக்குவேன்” என்றார். 11 மோசே தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: “யெகோவாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்? 12 மலைகளில் அவர்களைக் கொன்றுபோடவும், பூமியின்மேல் இல்லாதபடி அவர்களை அழிக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்வதற்காகவே அவர்களைப் புறப்படச்செய்தார் என்று எகிப்தியர்கள் சொல்லுவானேன்? உம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பி, உமது மக்களுக்குத் தீங்குசெய்யாதபடி, அவர்கள்மேல் பரிதாபம்கொள்ளும். 13 உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான். 14 அப்பொழுது யெகோவா தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார்.

15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவனுடைய கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. 16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாகவும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்தாகவும் இருந்தது. 17 மக்கள் ஆரவாரம் செய்கிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: “முகாமில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது” என்றான். 18 அதற்கு மோசே: “அது வெற்றியின் சத்தமும் அல்ல, தோல்வியின் சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது” என்றான். 19 அவன் முகாமிற்கு அருகே, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபமடைந்தவனாய், தன்னுடைய கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே வீசி உடைத்துப்போட்டு; 20 அவர்கள் உண்டாக்கின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் மக்கள் குடிக்கும்படி செய்தான். 21 பின்பு, மோசே ஆரோனை நோக்கி: “நீ இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய பாவத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்” என்றான். 22 அதற்கு ஆரோன்: “என்னுடைய ஆண்டவனுக்குக் கோபம் வராமல் இருப்பதாக; இது பொல்லாத மக்கள் என்று நீர் அறிந்திருக்கிறீர். 23 இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டாக்கும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்” என்றார்கள். 24 அப்பொழுது நான்: தங்கங்களை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரவேண்டும் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.

25 மக்கள் தங்களுடைய எதிரிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாக இருக்கிறதை மோசே கண்டு, 26 முகாமின் வாசலில் நின்று: “யெகோவாவின் பக்கம் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடம் சேரவேண்டும்” என்றான். அப்பொழுது லேவியர்கள் எல்லோரும் அவனிடம் கூடிவந்தார்கள். 27 அவன் அவர்களை நோக்கி: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்றான். 28 லேவியர்கள் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்தநாளில் மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் இறந்தார்கள். 29 “யெகோவா இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன் தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாக இருக்கிறதினால், யெகோவாவுக்கு உங்களைப் பிரதிஷ்டைசெய்யுங்கள்” என்று மோசே சொல்லியிருந்தான். 30 மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான். 31 அப்படியே மோசே யெகோவாவிடத்திற்குத் திரும்பிப்போய்: “ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள். 32 ஆகிலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும்” என்றான். 33 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். 34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார். 35 ஆரோன் செய்த கன்றுக்குட்டியை மக்கள் செய்யவைத்ததால் யெகோவா அவர்களை வாதித்தார்.

33:1 யெகோவா மோசேயை நோக்கி: “நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த செழிப்பான தேசத்திற்குப் போங்கள். 2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன். 3 ஆனாலும், வழியிலே நான் உங்களை அழிக்காதபடி, நான் உங்களிடம் வரமாட்டேன், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள்” என்றார். 4 துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். 5 ஏனென்றால், “நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்” என்று யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தார். 6 ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.

7 மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள். 8 மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 9 மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார். 10 மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். 11 ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.

12 மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; 13 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். 14 அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். 15 அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். 16 எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான்.

17 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். 18 அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். 19 அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, 20 நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். 21 பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22 என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; 23 பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.